/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டி
/
கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டி
ADDED : மே 04, 2025 12:49 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருவாணைக்கோயில் ஊராட்சியில், மிளகர் மேனி, ராஜாம்பேட்டை, தென்பாதி, விச்சூர் தோப்பு, திருவாணைக்கோயில் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசை குழாய்கள், கைக்குழாய்கள் ஆகியவற்றின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விச்சூர் தோப்பு கிராமத்தில், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.
இந்த தொட்டிக்கு ஆழ்துளை கிணறு வாயிலாக குடிநீர் ஏற்றப்பட்டு, அப்பகுதிக்கு தினமும் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாக பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து உள்ளது.
மேலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. சேதமடைந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, எந்நேரமும் இடிந்து விழும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.