/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் புது பஸ் நிலையத்தால் குழப்பம் ! இடம் தேர்வு இறுதியாகாததால் சிக்கல்
/
உத்திரமேரூரில் புது பஸ் நிலையத்தால் குழப்பம் ! இடம் தேர்வு இறுதியாகாததால் சிக்கல்
உத்திரமேரூரில் புது பஸ் நிலையத்தால் குழப்பம் ! இடம் தேர்வு இறுதியாகாததால் சிக்கல்
உத்திரமேரூரில் புது பஸ் நிலையத்தால் குழப்பம் ! இடம் தேர்வு இறுதியாகாததால் சிக்கல்
ADDED : செப் 02, 2024 05:58 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வேடபாளையத்தில், பேருந்து நிலையம் அமைப்பதற்காக , மேய்க்கால் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, மாற்று இடம் கிடைக்காததால், உத்திரமேரூர் புதிய பேருந்து நிலையம் அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில், 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்,உத்திரமேரூர் பேருந்து நிலையம் வழியாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், காஞ்சிபுரம், சென்னை, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில், 29 வழித்தட பேருந்துகள் மற்றும் ஐந்து 'ஸ்பேர்' பேருந்துகள் என, மொத்தம் 34 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தவிர, சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக திருவண்ணாமலைக்கும், அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், போதிய இடவசதி இல்லாமல், நெருக்கடியான இடத்தில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.
குறிப்பாக, ஆறு பேருந்துகள் மட்டுமே, நிலையத்தில் நிறுத்தும் அளவிற்கு நெருக்கடியான இடம் உள்ளது.
இதனால், சென்னை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து, செய்யாறு, போளூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள், உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடிவதில்லை.
இதனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள், நிலையத்திற்கு வெளியே பேருந்தை நிறுத்தி, பயனியரை இறங்கி விட்டு செல்கின்றனர். சில நேரங்களில், கிராமப்புற பயணியர் பேருந்துகளை தவறவிடும் சூழலும் உருவாகி உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு வெளியே பேருந்து நிலையத்தை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
ஆறு மாதங்களுக்கு முன், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில, போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து நிலையத்திற்கு இடம் ஆய்வு செய்தனர்.
உத்திரமேரூர் அடுத்த, வேடப்பாளையம் நுகர்பொருள் வாணிப கழகம் அருகே, 5 ஏக்கர் பரப்பு காலியான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உத்திரமேரூரில் புறவழி சாலை அமைக்கும் பணி துவங்கி இருக்கும் நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கிவிட்டால், கிராமப்புற பயணியரும் போக்குவரத்து நெரிசல் இன்றி, பயணம் செய்வதற்கு சவுகரியமாக இருக்கும் என, தெரிவித்தனர்.
உத்திரமேரூர் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய பேருந்து நிலையத்திற்கு, வேடபாளையத்தில் இடம் தேர்வு செய்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்து விபரங்களும் சேகரிக்கப்பட்டன. இன்னமும் முடிவு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்திரமேரூர் வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேடபாளையத்தில், புதிய பேருந்து நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு மாற்றாக, வேறு நிலம் வழங்க வேண்டி இருப்பதால், மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
கடந்த மாதம் வரையில் போதிய இடம் கிடைக்காததால், புதிய பேருந்து நிலையம் அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.