/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு வீடுகள் திட்ட பணிகளுக்கு கூலி தொகை தருவதில் குழப்பம்
/
அரசு வீடுகள் திட்ட பணிகளுக்கு கூலி தொகை தருவதில் குழப்பம்
அரசு வீடுகள் திட்ட பணிகளுக்கு கூலி தொகை தருவதில் குழப்பம்
அரசு வீடுகள் திட்ட பணிகளுக்கு கூலி தொகை தருவதில் குழப்பம்
ADDED : மார் 23, 2025 10:27 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2024 - 25ம் நிதி ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,855 பயனாளிகளுக்கு மாநில அரசின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்ட, பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல, மத்திய அரசின் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில், 584 பயனாளிகளுக்கு வீடுகள் மற்றும், 2023 - 24ம் நிதி ஆண்டில் பழங்குடியினத்தவர்களுக்கு வீடுகள் என மொத்தம், 3,087 வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.
அரசு திட்டங்களில் வீடு கட்டுவோருக்கு, தலா 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கி, அதற்குரிய கூலி தொகை அவரவர் வங்கி கணக்கில் விடுவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கனவு இல்ல திட்டத்தில் 90 நாட்கள் வீடு கட்டுவதற்கும், 10 நாட்கள் கழிப்பறை கட்டுவதற்கும் என, மொத்தம், 100 நாட்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல, பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பழங்குடியின வீடுகள் திட்டத்தில் 90 நாட்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. பயனாளிகளுக்கு, ஒரு நாள் வேலைக்குரிய, 319 ரூபாய், அவரவர் வங்கி கணக்கில் விடுவிக்கப்படும்.
அந்த வகையில், கனவு இல்ல திட்டத்திற்கு ஒரு வீட்டிற்கு 31,900 ரூபாய்; பிரதமர் மற்றும் பழங்குடியினர் வீடு திட்டத்திற்கு தலா 28,710 ரூபாய் என, கூலி தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட மூன்று திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு பதிவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வீடு கட்டும் பயனாளிகளுக்கு 35 நாட்கள் மட்டுமே வருகை பதிவு ஆகியுள்ளது. மீதம், 65 நாட்கள், அடுத்த நிதி ஆண்டிற்கு வழங்குவதாக அதிகாரிகள் கூறுவதால், அரசு திட்டங்களில் வீடு கட்டுவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வீடு கட்டும் பயனாளிகள் கூறியதாவது:
கனவு இல்லம் திட்டத்தில், 100 நாட்களுக்குரிய தொகை தனியாக வழங்கப்படும் என, பணி ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வீடு கட்ட துவங்கியதில் இருந்து, 35 நாட்கள் மட்டுமே வருகை பதிவாகியுள்ளது. மீதம், 65 நாட்கள் பதிவாகவில்லை.
வேறு நபர்களின் வேலை பதிவு அட்டை கொடுத்தால், அவர்களுக்கு வருகை பதிவேடு பதிவு செய்து பணம் அளிக்கப்படும். இல்லை எனில் பணம் கிடைக்காது என, அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது. உடனே, பயனாளிகள் வீடு கட்டும் பணிகளை துவக்கி இருந்தால், சரியாக 100 நாள் நிறைவு பெற்றிருக்கும்.
பெரும்பாலான வீடு கட்டும் பயனாளிகள், வீடு கட்டும் பணியை தாமதமாக துவக்கியதால், வருகை பதிவு சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
எனினும், கூடுதல் அட்டை பெற்று வருகை பதிவு செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து, வீடு கட்டும் பயனாளிகள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.