தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏர்போர்ட் திட்டம் ரத்தாகியும் பத்திரப்பதிவில்... குழப்பம்!:20 கிராம மக்கள் நிலத்தை விற்க முடியால் தவிப்பு

ஏர்போர்ட் திட்டம் ரத்தாகியும் பத்திரப்பதிவில்... குழப்பம்!:20 கிராம மக்கள் நிலத்தை விற்க முடியால் தவிப்பு

ஏர்போர்ட் திட்டம் ரத்தாகியும் பத்திரப்பதிவில்... குழப்பம்!:20 கிராம மக்கள் நிலத்தை விற்க முடியால் தவிப்பு


UPDATED : செப் 26, 2026 04:44 AM

ADDED : செப் 25, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 04:44 AM ADDED : செப் 25, 2026 08:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: பரந்துாரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், அதை சுற்றியுள்ள மற்ற நிலங்களின் பத்திரப்பதிவு தடை விலகாததால், அவற்றை விற்க முடியாமலும் வாங்க முடியாமலும், 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை குறித்தும் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்துாரில் அமைக்க, 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை உள்ளடக்கி, 5,300 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இத்திட்ட பகுதியில் உள்ள நிலங்களை வாங்குவது, விற்பது உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், பரந்துாரில் விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக, ஆக., 24ல் சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு தாலுகாக்களிலும், பரந்துார் விமான நிலைய திட்டத்துக்காக, 5,300 ஏக்கர் நிலம் கணக்கில் எடுக்கப்பட்டது. இதில், 3,600 ஏக்கர் பட்டா நிலங்களாக இருந்தது.

ஏற்கனவே 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

இதனால், விமான நிலைய திட்டத்துக்காக நிலங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் நிலை குறித்து தெரியாமல், பரந்துார், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

பட்டா நிலம் வைத்திருப்போர், அவசர குடும்ப தேவைக்காக நிலத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், நிலத்தை அடமானமாக வைத்து, வங்கியில் கடன் பெறுவதிலும் சிக்கல் உள்ளது.

விமான நிலைய திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில், நிலங்களின் விற்பனை மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் இருந்ததை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், தற்போது அந்த திட்டமே கைவிடப்பட்டுவிட்டதால், அதே கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிப்பது ஏன் என, கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கிடையே, இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தின் நிலையையும் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட பிற கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகியவற்றிடம் இருந்து தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட பதிவாளர் சுரேஷிடம் கேட்டபோது, ''பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை. அரசாணை வந்த பின் தான் பதிவு செய்யலாம். வருவாய் துறை சார்பில், குறிப்பிட்ட இந்த சர்வே எண்கள் பதிவு செய்ய தடை விதித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாணை வந்தவுடன், அவர்களிடம் இருந்து எங்களுக்கு கடிதம் வழங்கப்படும். அதை தொடர்ந்து, பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.------

பதிவு நடவடிக்கையை துவக்க வேண்டும் ஏர்போர்ட் திட்டம் வருகிறது என்பதால், பத்திரப்பதிவு தடை இருந்தது. இப்போது திட்டம் ரத்து செய்யப்பட்டதால், நிலங்களுக்கான பதிவு நடவடிக்கையை தொடங்க வேண்டும். அவசர தேவைக்கு கூட, நிலங்களை அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியவில்லை. அதேபோல், ஏகனாபுரம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகம் இடிந்துவிட்டது. அதேபோல், ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடை மோசமான நிலையில் உள்ளது. அந்த கட்டடங்களை கட்டி தர வேண்டும். சட்டசபையில், ஏகனாபுரம் கிராமத்தில் சமுதாய கூடம் கட்டித்தருவதாக, அமைச்சர் வன்னியரசு அறிவித்தார். அந்த கட்டடத்தையும் விரைவாக கட்டித்தர வேண்டும். - எஸ்.சுப்பிரமணி, தலைவர், பரந்துார் ஏர்போர்ட் திட்ட எதிர்ப்பு குழு, ஏகனாபுரம்.


பரந்துாரில் விமான நிலையம் அமைக்க கோரி தீர்மானம் வாலாஜாபாத் ஒன்றியக்குழு கூட்ட அரங்கில், சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக்குழு சேர்மன் தேவவேந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களுக்கு ஊதியம்; ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி உள்ளிட்ட 51 பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ''பரந்துாரில் விமான நிலையம் அமைக்க அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்,'' என, வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் ஆகியோர் மேசை தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் பின் நடந்த விவாதம்: தி.மு.க.,- ஒன்றியக்குழு துணை சேர்மன், சேகர்: பரந்துார் ஊராட்சியில் இரண்டாவது விமான நிலையம் கொண்டு வரவேண்டும். அரசும் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தி பணமும் விடுவித்துள்ளது. இந்நிலையில், த.வெ.க., அரசு பரந்துாரில் விமான நிலையம் ரத்து செய்யப்படும் என, அறித்துள்ளது. இது, கிராமத்தின் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்களை பாதிக்கும். குறிப்பாக, 20 ஆண்டுகள் பின் நோக்கி செல்லும் சூழல் உள்ளது. அ.தி.மு.க., கவுன்சிலர், நாகராஜ்: இத்தனை நாட்கள் இல்லாமல், இப்போது தீர்மானம் கொண்டு வர காரணம் என்ன; அரசியல் ஆதாயமா? சேகர்: பரந்துாரில் விமான நிலையம் அமைத்தால், நம் ஒன்றியம் வளர்ச்சி பெறும், 'புல்லட்' ரயில் சேவை கிடைக்கும்; காஞ்சிபுரம் வளர்ச்சி பெறும். வேறு ஏந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை. அப்படி இருந்தால், உங்கள் கட்சி தலைவர் கூட விமான நிலையம் வேண்டும் என்றே கூறுகிறார். சுயேட்சை கவுன்சிலர், தாமோதரன்: பரந்துார் விமான நிலையம் ரத்து செய்தாலும், நிலங்களின் மதிப்பு குறையவில்லை, அதிகரித்து தான் உள்ளது. விமான நிலையம் வந்தால் கூடுதல் வளர்ச்சி பெறும். இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us