/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...எதிர்பார்ப்பு:குடிநீர், கழிப்பறை வசதியின்றி குழந்தைகள் தவிப்பு
/
அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...எதிர்பார்ப்பு:குடிநீர், கழிப்பறை வசதியின்றி குழந்தைகள் தவிப்பு
அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...எதிர்பார்ப்பு:குடிநீர், கழிப்பறை வசதியின்றி குழந்தைகள் தவிப்பு
அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...எதிர்பார்ப்பு:குடிநீர், கழிப்பறை வசதியின்றி குழந்தைகள் தவிப்பு
ADDED : மே 11, 2025 09:24 PM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் குழந்தைகள் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ், 940 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு ஆறு மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், குழந்தைகள் இறப்பு மற்றும் கர்ப்பிணியரின் இறப்பு விகிதத்தை குறைத்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சுகாதார கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது. தவிர 11,280 குழந்தைகள், ஆரம்ப கல்வி பயில்கின்றனர்.
இந்த மையங்கள் பெரும்பாலும், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. அதனால் போதிய இடவசதி, காற்றோட்ட வசதி இல்லாமல், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
அவசரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட வழியில்லாமல், அருகில் உள்ள குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், நீரில் தவறி விழும் அபாயம் உள்ளது.
தவிர, குடிநீர் வசதியில்லாததால், அங்கன்வாடி ஊழியர்கள் தண்ணீர் எடுக்க ரொம்ப துாரம் செல்லும் நிலை உள்ளது.
எனவே, வாடகை கட்டடங்களில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு, விரைந்து சொந்த கட்டடங்கள் கட்ட, பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி அறிவை புகட்டும் இடமாக உள்ளது. அவ்வாறு அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு போதிய அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
தற்போது, சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கும், அங்கன்வாடி மையங்களில் போதிய காற்றோட்ட வசதி, கழிப்பறை வசதி இல்லாமல், குழந்தைகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், சேதமடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்களை கட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில், 28 அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
இந்த மையங்களுக்கு சொந்தமாக கட்டடம் கட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து ஒப்புதல் கிடைத்தவுடன் அனைத்து வசதிகளுடன், படிப்படியாக அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டும் பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.