/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாடுகளை பிடித்து விற்பனை செய்வது தொடர்கிறது மாநகராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் புகார் மனு
/
மாடுகளை பிடித்து விற்பனை செய்வது தொடர்கிறது மாநகராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் புகார் மனு
மாடுகளை பிடித்து விற்பனை செய்வது தொடர்கிறது மாநகராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் புகார் மனு
மாடுகளை பிடித்து விற்பனை செய்வது தொடர்கிறது மாநகராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் புகார் மனு
ADDED : ஜூலை 30, 2025 12:26 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் ஒப்படைப்பதும், அங்கிருந்த மாடுகளை 9,500 ரூபாய்க்கும், 35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் சம்பவங்கள் தொடர்வதாக, மாநகராட்சி கவுன்சிலர் கார்த்திக் என்பவர், கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், சாலையின் நடுவே வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும், அவ்வப்போது, மாநகராட்சியில் சுற்றும் மாடுகளை பிடித்து, மாடுகள் கட்டி பாதுகாக்கப்படும் இடத்தில் ஒப்படைக்கின்றனர். மாடுகள், உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைப்பதில்லை.
பிடிக்கப்படும் மாடுகள், மாட்டு தொழுவம் நடத்துவோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்து வந்தனர்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் காவலான்கேட், ஓரிக்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட ஆறு மாடுகளை, களக்காட்டூர் ஊராட்சியில் உள்ள விச்சந்தாங்கல் கிராமத்தில், உள்ள மாடுகள் கட்டி பாதுக்காக்கப்படும் இடத்தில் ஒப்படைத்தனர்.
அதில், ஒரு மாட்டை, 9,500 ரூபாய்க்கு, தனி நபருக்கு, மாட்டு தொழுவத்தினர் விற்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, கமிஷனராக இருந்த நவேந்திரன், மாகரல் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, மாநகராட்சி பணிகள் குழு தலைவரும், 48வது வார்டு கவுன்சிலருமான கார்த்திக், கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாநகராட்சியில், சாலையில் தொந்தரவாக சுற்றி திரியும் மாடுகளை பிடித்து மாட்டு தொழுவம் நடத்துவோரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால், அவர்கள் மாடுகளை விற்கின்றனர்.
விச்சந்தாங்கலில் உள்ள மாட்டு தொழுவத்தினர், 15 நாட்களுக்கு முன், ஒரு மாட்டை 9,500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அதேபோல, கடந்த 17ம் தேதி, வெங்கடேசன் என்பவரின் ஆறு மாடுகளை பிடித்து, மாட்டு தொழுவம் நடத்துவோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாட்டு உரிமையாளரிடம் 35,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, மாடு பிடிக்கும் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர் ஒருவர், மாடுகளை திரும்ப கொடுத்துள்ளனர்.
மாடுகளை பிடிக்க, ஒப்பந்ததாரருக்கு, ஒரு மாட்டிற்கு, 1,200 ரூபாய் மாநகராட்சி வழங்கி வருகிறது.
இருப்பினும், மாடுகளை பிடிப்பதும், லஞ்சமாக பணத்தை பெற்று திரும்ப ஒப்படைப்பதும் செய்கின்றனர். மாடுகளை பிடிப்பதில் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது.
ஒப்பந்ததாரர், மாடுகளை பிடிக்கும் நடைமுறையில் எந்த விதிமுறைகளும் பின்பற்றவில்லை. மாடுகளை பிடித்த பின், எத்தனை மாடுகள் பிடிக்கப்பட்டது என, துப்புரவு அலுவலர், போலீசாருக்கு தெரியபடுத்த வேண்டும்.
ஆனால் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றுவதில்லை. மாடுகளை பிடிக்க ஒப்பந்தம் என்பது, அவற்றை திருடி விற்பனை செய்வதில் ஈடுபடுகின்றனர்.
எனவே, மாட்டு தொழுவத்தினர், ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.