/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
/
மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
ADDED : அக் 04, 2025 10:34 PM
காஞ்சிபுரம்:மழைநீர் கால்வாய், சாலை, பாதாள சாக்கடை பிரச்னை, குடிநீர் என பல வகையான பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைத்தும், செய்து கொடுப்பதில்லை என, காஞ்சிபுரம் கவுன்சிலர்கள், அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளின் கீழ், 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்ய பகுதி மக்கள் கவுன்சிலர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மழைநீர் கால்வாய் கட்டுவது, புதிய சாலை அமைப்பது, சாலை சீரமைப்பு, குடிநீர் தொட்டி கட்டுவது, கழிவுநீர் பிரச்னை, பொது கழிப்பறை கட்டுவது என பல வகையான கோரிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கவுன்சிலர்கள் வாயிலாக சென்றபடியே உள்ளன.
ஆனால், அதிகாரிகள் பலரும் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அலட்சியம் காட்டுவதாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தங்கள் வார்டு பிரச்னைகளை பலமுறை எடுத்து கூறியும், டெண்டர் விடாமல் இழுத்தடிப்பதாக, மாநகராட்சி கூட்டத்திலேயே பல கவுன்சிலர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வது வாடிக்கையாகி வருகிறது.
இருப்பினும், கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் ஈடுபாடு காட்டாததால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மட்டுமல்லாமல், தி.மு.க., கவுன்சிலர்களே பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, மாநகராட்சி கூட்டத்தில் நுாற்றுக்கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை செயல்வடிவமாக்க, டெண்டர் விட்டு பணிகள் துவங்குவதில்லை என்பதே கவுன்சிலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
அதிகாரிகள் தரப்பில் நிதியின்மை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கவுன்சிலர்கள் கேட்கும் கோரிக்கைகளை போதிய நிதியில்லாத காரணத்தாலேயே, அவற்றை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்கின்றனர்.
ஆனால், 10 லட்ச ரூபாய்க்கு குறைவாக செலவிட கூடிய திட்டங்களை கூட, பொறியாளர் பிரிவு மேற்கொள்வதில்லை என, கவுன்சிலர்கள் பலரும் குமுறுகின்றனர்.
கவுன்சிலராக பதவி ஏற்ற 2022ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்தும், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை பிரச்னை, சாலை போடுவது போன்ற பிரச்னகள் இதுவரை தீரவில்லை என கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என, கட்சி பாகுபாடு இல்லாமல், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
வார்டு மக்கள் கவுன்சிலர்களை கேள்வி எழுப்புவதால், பதில் கூற முடியாமல், பல கவுன்சிலர்கள் விழி பிதுங்குகின்றனர். அதிகாரிகள் செய்து தரவில்லை என, கவுன்சிலர்களே நேரடியாக வார்டு மக்களிடமும் தெரிவித்து விடுகின்றனர்.
இதனால், அதிகாரிகள் மீதான அதிருப்தி கவுன்சிலர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.