கிரைம் கார்னர்: காரில் குட்கா பறிமுதல்:கடத்திய மூவர் கைது
கிரைம் கார்னர்: காரில் குட்கா பறிமுதல்:கடத்திய மூவர் கைது
UPDATED : மே 12, 2026 06:57 PM
ADDED : மே 12, 2026 06:54 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பல்லவாடா கிராமத்தில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி சென்ற காரை சோதனையிட்டனர். அதில், 80 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதை கடத்திய, சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த நிர்மல், 29, விஜய், 37, லோகேஷ், 30, ஆகிய மூவரை கைது செய்த பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***
திருவள்ளூர் சுடுகாடு அருகே
முதியவர் சடலமாக மீட்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஐவேலி அகரம் சுடுகாடு பகுதியில், ஆண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் மாலை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
****
தனியார் நிறுவன ஊழியரை
தாக்கிய நபர் சிக்கினார்
மணவாளநகர்: கடம்பத்துார் ஒன்றியம் நயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரதீப், 39; ஸ்ரீபெரும்புதுார் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் 'ஹூண்டாய்' காரில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஆட்டோ, கார் மீது மோதுவது போல் வந்ததது.
இதுகுறித்து பிரதீப் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆட்டோவில் இருந்த தினேஷ், சிவா, நராயாணன் ஆகியோர் பிரதீப்பை தாக்கினர். இதில் படுகாயமடைந்தவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், நாராயணன், 44, என்பவரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும், இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
****
மது அருந்தும் போது விபரீதம்
சிறுவனை தாக்கிய இளைஞர்
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில், 15 வயது சிறுவனுடன், அதே பகுதியைச் சேர்ந்த, 21 வயது இளைஞர், நேற்று முன்தினம் மது அருந்தியுள்ளார். மது அருந்தும் போது, சமீபத்தில் நடந்த கிராம கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவனை தாக்கிய இளைஞர், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த சிறுவன், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
