தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பரந்துாரில் ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசு... ஆர்வம்! நிலம், நிதி சிக்கலை தீர்க்க தனி குழு அமைப்பு

பரந்துாரில் ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசு... ஆர்வம்! நிலம், நிதி சிக்கலை தீர்க்க தனி குழு அமைப்பு

பரந்துாரில் ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசு... ஆர்வம்! நிலம், நிதி சிக்கலை தீர்க்க தனி குழு அமைப்பு


UPDATED : ஜூன் 09, 2026 07:52 PM

ADDED : ஜூன் 09, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 07:52 PM ADDED : ஜூன் 09, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள த.வெ.க., அரசு, பரந்துார் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டி வரும் நிலையில், திட்டம் செயல்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. திட்டத்திற்கு தேவையான பல்வேறு அனுமதிகளை விரைந்து வழங்கவும், நிதி மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும், மத்திய அரசு தனிக்குழு அமைத்துள்ளதாக, விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை விமான நிலையம் மூன்று முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஓடுபாதை விரிவாக்கத்தில் சிக்கல், வளர்ச்சி பணிகள் இழுத்தடி காரணமாகவும், எதிர்கால தேவை கருதியும், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம், கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக, 5,600 ஏக்கர் நிலம் தேர்வான நிலையில், அரசுக்கு சொந்தமான நிலங்களைத் தவிர்த்து, 3,700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில், 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளதால், பரந்துார் விமான நிலைய திட்டத்தின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பரந்துார் விமான நிலைய திட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம், முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை தயாரித்து, முதல்வர் விஜயை சந்திக்க விமான நிலைய ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதனால், பரந்துார் விமான நிலைய திட்டம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தென் மாநிலங்களின் முக்கிய நுழைவாயிலாக விளங்கும் சென்னை அருகே புதிய பசுமை விமான நிலையம் அமைவது வர்த்தகம், முதலீடு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என, மத்திய அரசு கருதுகிறது.

இதுகுறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

பரந்துார் விமான நிலையம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு தரும் திட்டம். விமான சேவைகள் விரிவடையும். இதற்கான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதிகளை விரைந்து வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது.

பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பொருளாதார மண்டலம் அமைவது மிகவும் அவசியம். தேவையான நிலங்களை மாநில அரசு விரைந்து கையகப்படுத்த வேண்டும்.

திட்ட பணிகளில் ஏற்படக்கூடிய நிர்வாக, நிதி மற்றும் நிலம் தொடர்பான சிக்கல்களை தீர்க்க, மத்திய அரசு தனிக்குழு அமைத்துள்ளது.

குழுவில், விமான நிலைய ஆணையம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளின் அதிகாரிகள், மாநில அரசின் சிறப்பு அதிகாரி ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த கால அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, இந்த திட்டத்தை வளர்ச்சி நோக்கிலான முயற்சியாகவே மத்திய அரசு பார்க்கிறது.

மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், விரிவான திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அடுத்தகட்ட செயல்முறைகள் சாதகமாக அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீதிமன்றத்தை நாடுவோம்! பரந்துாரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக, தி.மு.க., - எம்.பி.,க்கள் பார்லி.,யில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். மெட்ரோ நகரங்களில் மிகவும் மோசமான விமான நிலையங்களில் ஒன்றாக, சென்னை விமான நிலையம் உள்ளது. ஏரோபிரிட்ஜ் வசதிகள், ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
பரந்துாரில் புதிய விமான நிலையம் கைவிடப்பட்டால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். பெரிய முதலீடுகளை ஈர்க்கவும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும், பரந்துார் விமான நிலையம் அவசியம். அப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும். பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டால், நீதிமன்றத்தை நாட தயங்கமாட்டோம். - வில்சன், தி.மு.க., - எம்.பி.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us