/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாற்றங்கால் பண்ணைகளின் பசுமை குடில்கள் சேதம்
/
நாற்றங்கால் பண்ணைகளின் பசுமை குடில்கள் சேதம்
ADDED : ஜன 24, 2024 09:52 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. தலா, ஒவ்வொரு ஊராட்சிக்கும், 30 லட்சம் ரூபாய் கிராம வளர்ச்சி நிதி, குக்கிராம வளர்ச்சி நிதி மற்றும் மக்கள் தொகை அடிப்படை நிதி என, மூன்று நிதிகள் சேர்த்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிதி பெறுவதற்கு, ஆண்டுதோறும் தலா, 55 ஊராட்சிகளை தேர்வு செய்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சாலைகள் நெற்களங்கள், செடிகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி துறை செய்து கொடுக்கிறது.
கடந்த, 2021 - 22ம் நிதி ஆண்டு முதல், 2024ம் ஆண்டு வரையில், 165 ஊராட்சிகளுக்கு 66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில், கட்டடங்களுக்கு புதுப்பிக்கும் பணி மற்றும் நெற்களங்கள் கட்டிக் கொடுக்கும் பணிகள் ஆக்கப்பூர்வமாக உள்ளது. பொது மக்களும் பயன்பெறும் வகையில் இருக்கிறது.
இதில், நாற்றாங்கல் பண்ணை மற்றும் பசுமை குடில்களில் செடிகள் உற்பத்தி செய்வதில், 100 நாள் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி மற்றும் தொழில்நுட்பங்கள் தெரியாததால், தலா, 2 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் அமைக்கும் பணி, பல்வேறு ஊராட்சிகளில் சேதமாகி கிடக்கிறது.
குறிப்பாக, இலுப்பப்பட்டு, ஏனாத்துார், கோவளவேடு, ஆரிய பெரும்பாக்கம், ஒழுக்கோல்பட்டு, சிறுனை பெருகல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கூடாரங்கள் சேதமடைந்துள்ளன. அதன்படி, ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 3 கோடி ரூபாய் வீணாகி உள்ளது.
இதில், செடிகளை உற்பத்தி செய்து பாதுகாக்கவும் முடியாத சூழல் உருவாகி உள்ளது. மேலும், இனி வரும் கோடை காலங்களில், பசுமை நிழல் வலை குடில் இல்லை என்றால், செடிகளை உற்பத்தி செய்ய முடியாது.
எனவே, மாவட்ட ஊரக வளர்ச்சி நிர்வாகம் தலையீட்டு அனைத்து பசுமை குடில்களையும் சீரமைத்து, செடிகள் உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நாற்றாங்கல் பண்ணை மற்றும் பசுமை குடிலுக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்து செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பலமான காற்று அடித்ததால், பசுமை குடில்களின் துணிகள் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதை, ஊராட்சி பொது நிதி மற்றும் 15வது நிதிக்குழு மானியத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில், அதற்குரிய ஆணை வழங்கப்படும். அதன் பின், பசுமை குடில்கள் சீரமைத்து, தங்கு தடையின்றி செடிகள் உற்பத்தி செய்து, பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.