/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஷ்டபுஜர் கோவில் அருகே சேதமான பாலத்தால் அபாயம்
/
அஷ்டபுஜர் கோவில் அருகே சேதமான பாலத்தால் அபாயம்
ADDED : பிப் 06, 2025 12:16 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பகுதியில், அஷ்டபுஜ பெருமாள் கோவில் அருகே, மஞ்சள்நீர் கால்வாயின் கிளை கால்வாய் குறுக்கே சிறுபாலம் உள்ளது. பழமையான இப்பாலம், சிறிது சிறிதாக சேதமாகி வந்தது.
மழைக்காலம் வரும்போது, ஒவ்வொரு ஆண்டும் இப்பாலம் அமைந்த பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் துார்வாரும் பணி மேற்கொள்ளும். ஆனால், சேதமான பாலம் சீரமைக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், பாலத்தின் ஒரு பகுதி கடந்தாண்டு டிசம்பரில் மேலும் சேதமடைந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்லும்போது அச்சத்துடன் செல்கின்றனர். இதனால், அப்பகுதியினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கார், வேன், இருசக்கரம் என, அனைத்து வாகனங்களும் இப்பாலத்தின் மீது தொடர்ந்து பயணிப்பதால், பாலத்தின் பல்வேறு இடங்கள் உடைந்து, மேலும் சேதமடைந்து வருகிறது. பாலத்தின் ஒரு பகுதி கால்வாய்க்குள் மூழ்கும் நிலையில் உள்ளது. சாலையும் உடைந்து கொண்டே வருகிறது.
மார்கழி மாதம் நடந்த வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கு, அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும், இந்த பாலம் அருகே செல்லவே அச்சமடைந்தனர். விபத்து ஏற்படும் முன், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.