தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு விடியல் வருது! அரசின் முடிவால் காஞ்சி, செங்கை விவசாயிகள் மகிழ்ச்சி

பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு விடியல் வருது! அரசின் முடிவால் காஞ்சி, செங்கை விவசாயிகள் மகிழ்ச்சி

பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு விடியல் வருது! அரசின் முடிவால் காஞ்சி, செங்கை விவசாயிகள் மகிழ்ச்சி

3


UPDATED : ஆக 06, 2026 07:24 PM

ADDED : ஆக 06, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 07:24 PM ADDED : ஆக 06, 2026 07:22 PM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:அறிவிக்கப்பட்டு, 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த, பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு தற்போது விடியல் கிடைக்க உள்ளது. திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசு பட்ஜெட்டில், 25 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணையாறு, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழைக் காலங்களில், இந்த ஆற்றில் பல 100 டி.எம்.சி. அளவிலான உபரி நீர், எந்தவித பயன்பாடும் இன்றி கடலில் கலக்கிறது.

இந்த உபரி நீரை, சுமார் 35 கி.மீ., நீள கால்வாய் மூலம் செய்யாற்றிற்கு மாற்றி, அதன் வழியாக பாலாற்றில் திருப்பி விட வேண்டும்.

இதற்காக, பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு அவசியம். இதை உணர்ந்த தமிழக அரசு, 2013 -14ம் ஆண்டு பட்ஜெட்டில், பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதே ஆண்டில், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது.

தி.மு.க., ஆட்சியில், நீர்வள ஆதாரத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், இத்திட்டம் பற்றி ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறி வந்தார். ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலாவது பணிகளை தொடங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த விரிவான செய்தி, நம் நாளிதழில், கடந்த ஜுலை 22ல் வெளியானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட்டில், பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அதாவது, காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, 150 கோடி ரூபாய்; தென்பெண்ணையாறு - செய்யாறு; தென்பெண்ணையாறு - பாலாறு; தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 50 கோடி ரூபாய் என, மொத்தம் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்திற்கு, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

செய்யாறையும், தென்பெண்ணை ஆற்றையும் இணைத்தால், திருவண்ணாமலை வழியாக, செய்யாற்றில் தண்ணீர் வரும். செய்யாற்றில் தண்ணீர் வந்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றிலும் தண்ணீர் வரும்.

தென்பெண்ணை ஆற்றுக்கும், செய்யாற்றுக்கும் இடையே 22 கி.மீ., கால்வாய் வெட்டினால், இரு ஆறுகளையும் இணைத்து விடலாம் என்கின்றனர் நீர்வள ஆதாரத் துறையினர்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, மூன்று மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறையினர் கூறியதாவது:

பட்ஜெட்டில் அறிவிப்பு வந்துள்ளதையடுத்து, பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கும் அரசாணை பிறப்பிக்கப்படும். பாலாறு - தென்பெண்ணையாறு ஆறுகளை இணைப்பதற்கான சர்வே பணிகள், நில எடுப்பு, திட்ட மதிப்பு, எவ்வளது தண்ணீர் கிடைக்கும், விவசாய வாழ்வாதாரம் போன்ற பல்வேறு விபரங்கள் அறிக்கையில் இடம்பெறும்.

ஆய்வறிக்கை அளித்த பின், மீண்டும் அரசாணை பிறப்பித்து, கருத்துகள் கேட்டு, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கும். முன்னதாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிதான். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஆண்டு முழுதும் பாலாற்றில் தண்ணீர் ஓடும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னை வராது. இந்த அறிவிப்பு வரவேற்கக்கூடியது. - கே.நேரு, மாநில துணை செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us