/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புகார் பெட்டி பகுதிக்கு சார்...
/
காஞ்சி புகார் பெட்டி பகுதிக்கு சார்...
ADDED : பிப் 13, 2024 04:24 AM

வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?
சின்ன காஞ்சிபுரம், அரச மரம் தெருவில், சாலையோரம் சிமென்ட் சிலாப் மூடியுடன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் மீது கனரக வாகனங்கள் சென்றதால், சிலாப் உடைந்து விழுந்து, கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியினர் கால்வாயில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கால்வாயை துார்வாரி, புதிய சிமென்ட் சிலாப் அமைத்து வடிகால்வாயை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
----- எஸ்.முத்துகுமார், காஞ்சிபுரம்.
தரையை ஒட்டி மூடியில்லாத கிணறு
குன்றத்துார் ஒன்றியத்தில் எருமையூர்ஊராட்சி அமைந்துள்ளது. எருமையூர்-- - பழந்தண்டலம் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், எருமையூரில் சாலையோரம் தரையொட்டிய கிணறு உள்ளது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. கிணற்றின் மேல் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும்.-
- என்.சதீஷ், எருமையூர்.
சேதமடைந்த தரைப்பாலம்
மணிமங்கலம் - நடுவீரப்பட்டு சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், நடுவீரப்பட்டு அருகே உள்ள தரைப்பாலம், வடக்கிழக்கு பருவமழையின் போது பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால் சேதமடைந்துள்ளது.
இதனால், பாலம் அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.-
- ஆர்.பிரபாகரன், மணிமங்கலம்.
கைவிடப்பட்ட சிறு மின்விசை பம்பு
உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது களியப்பேட்டை கிராமம். இங்குள்ள காலனி பகுதியில், 5 ஆண்டுகளுக்கு முன் ஆழ்த்துளை கிணறு அமைத்து அதன் மூலம் உறிஞ்சும் நீரை சிறு மின்விசை பம்ப் குடிநீர் தொட்டியில் ஏற்றி, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஓராண்டாக சிறு மின்விசை பம்பு மூலமான குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் கோடைக்காலம் வர உள்ளதால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, களியப்பேட்டையில் கைவிடப்பட்ட சிறு மின்விசை பம்ப் குடிநீர் வினியோகம் மீண்டும் துவக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். முருகன், களியப்பேட்டை.