/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பால பணி தாமதம்: 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தவிப்பு
/
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பால பணி தாமதம்: 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தவிப்பு
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பால பணி தாமதம்: 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தவிப்பு
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பால பணி தாமதம்: 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தவிப்பு
UPDATED : ஜன 03, 2026 09:00 AM
ADDED : ஜன 03, 2026 05:26 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில், ரயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் உள்ளதால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில், ரயில்வே கடவுப்பாதை உள்ளது.
ராவுத்தநல்லுார், இந்தலுார், வெங்கடேசபுரம், பருக்கல், தண்டலம், பெரியகளக்கடி, பெருக்கரணை, சூணாம்பேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த கடவுப்பாதையைத் தாண்டி பல்வேறு பணிகளுக்காக பல இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி இந்த கடவுப்பாதை மூடப்படுகிறது.
இதனால், சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளிடம், நீண்ட காலமாக பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் பின், ரயில்வே துறையினர் கடவுப்பாதையில் கடக்கும் வாகனங்களை கணக்கெடுத்து, ரயில்வே மேம்பாலம் கட்டலாம் என, உயரதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து, மேல்மருவத்துார் -- அச்சிறுபாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, அச்சிறுபாக்கத்தில் மேம்பாலம் அமைக்க, 2011 - -12ம் ஆண்டு, 32.3 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியது.
இந்த பாலம் 730 மீட்டர் நீளம், 28 அடி அகலத்தில் அமைகிறது. கடந்த 2012ம் ஆண்டு, தண்டவாள பகுதியில் மேம்பாலப் பணியை, ரயில்வே நிர்வாகம் முடித்தது. அதன் பின், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பகுதியில் தனியார் நிலங்கள் இருந்ததால், கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
இதில், நில உரிமையாளர்கள் ஆவணங்கள் பெறுவதில் காலதாமதம், நீதிமன்றங்களில் வழக்கு நிலுவை என, பிரச்னை இருந்தது.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்ட பின், நிலம் கையகப்படுத்தும் பணியை முடித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.
அதன் பின், மேம்பாலம் அமைக்க கடந்தாண்டு, பிப்ரவரியில் 'டெண்டர்' விடப்பட்டது.
செங்கல்பட்டு வெங்கடேஸ்வரா ரோடு கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்திற்கு, கடந்த ஜூன் மாதம் டெண்டர் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மேம்பாலப் பணிகள் துவக்கப்பட்டன.
இம்மாதத்தில் மேம்பாலத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது 85 சதவீதம் பணிகளே முடிந்துள்ளன. இதனால், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதிய சிக்கல் இந்நிலையில், ரயில்வே தண்டவாளம் பகுதியை கடக்கும் வகையில், கூடுதலாக ஒரு 'பில்லர்' அமைத்து, மேம்பாலம் அமைக்க வேண்டிய கட்டாயம், ரயில்வே துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறையினரின் இந்த காலதாமதத்தால், மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறையினர், இம்மாதத்திற்குள் முடிவு பெறும் வகையில் பணிகளை செய்துவரும் நிலையில், ரயில்வே துறையினர் தண்டவாளத்தை கடக்கும் மேம்பாலம் அமைக்க, இன்னும் பணிகளை துவக்கவில்லை.
இதனால், அப்பகுதி ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், தவியாய் தவித்து வருகின்றனர். எனவே, ரயில்வே துறை விரைவில் பணிகளை முடித்து, மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

