/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போலீஸ், வருவாய் துறைகளின் எல்லை பிரிப்பு...இழுபறி! : அரசின் அலட்சியத்தால் மக்கள், அதிகாரிகள் அவதி
/
போலீஸ், வருவாய் துறைகளின் எல்லை பிரிப்பு...இழுபறி! : அரசின் அலட்சியத்தால் மக்கள், அதிகாரிகள் அவதி
போலீஸ், வருவாய் துறைகளின் எல்லை பிரிப்பு...இழுபறி! : அரசின் அலட்சியத்தால் மக்கள், அதிகாரிகள் அவதி
போலீஸ், வருவாய் துறைகளின் எல்லை பிரிப்பு...இழுபறி! : அரசின் அலட்சியத்தால் மக்கள், அதிகாரிகள் அவதி
ADDED : ஜன 19, 2025 08:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் துறை, கூட்டுறவு, ஊரக வளர்ச்சி, போலீஸ் உள்ளிட்ட துறைகளில், நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் நீண்ட காலமாகவே இழுபறியாக உள்ளது. மக்களின் அலைச்சலை குறைக்கவும், அரசு அதிகாரிகளுக்கு பணிச்சுமையை குறைக்கவும், எல்லை பிரிப்பு போன்ற நிர்வாக மாற்றங்களை அரசு எடுக்கும் என, அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், 4,300 சதுர கி.மீ., பரப்பளவில், 13 தாலுகா, 13 ஒன்றியங்கள் கொண்ட பெரிய மாவட்டமாக செயல்பட்டது. நிர்வாக வசதிக்காக, கடந்த 2019ல், செங்கல்பட்டு சுற்றியுள்ள பகுதிகளை தனியாக பிரித்து, செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது.
இதனால், காஞ்சிபுரம் மாவட்டம் ஐந்து தாலுகா, ஐந்து ஒன்றியங்களுடன், 1,700 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட சிறிய மாவட்டமாக உள்ளது. இருப்பினும் நிர்வாக வசதிக்காகவும், மக்களின் தேவைக்காகவும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை நீண்ட காலமாகவே உள்ளது.
அவ்வாறு வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு துறை போன்ற துறைகளில் நிர்வாக மாற்றங்கள் அவசியமாகிறது. ஆனால், பிரிக்கப்படாமல் உள்ள வருவாய் குறுவட்டங்கள், ஊராட்சி ஒன்றியம், கூட்டுறவு ஒன்றியம் போன்றவை எளிதாக நிர்வாகம் செய்வதில் சிக்கலை ஏற்படுத்தும்.
உதாரணமாக, காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட, காஞ்சிபுரம் டவுன் குறுவட்டத்திற்குள், 10க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் வருகின்றன. டவுன் பகுதிக்குள் பெறப்படும் பட்டா, ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு சான்றிதழ் என, தினமும் 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டிய பணிச்சுமை வருவாய் ஆய்வாளருக்கு ஏற்படுகிறது.
இவற்றை குறைக்க, காஞ்சிபுரம் டவுன் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க வருவாய் துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசுக்கு கருத்துரு அனுப்ப இருப்பதாக, வருவாய் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேபோல், காஞ்சிபுரம் நகர் பகுதியை சுற்றியுள்ள திருக்காலிமேடு, ஓரிக்கை, தேனம்பாக்கம், செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகள் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன், 10 ஆண்டுகளுக்கு இணைந்தன.
இந்த பகுதிகள் மாநகராட்சியின் நகர் பகுதியாக செயல்பட்டாலும், வருவாய் துறையை பொறுத்தவரை ஊரக பகுதியாகவே தொடர்கிறது. பட்டா விபரம், வரைபடம் போன்ற விபரங்களை சரிபார்க்க அரசு இணையதளத்தை நாடும் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது.
இணையதளத்தில் ஊரக பகுதிலேயே பட்டா விபரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளை, வருவாய் துறையில் நகர்ப்பகுதிக்குள் கொண்டு வரப்படாமலேயே தொடர்கிறது.
ஊரக வளர்ச்சித் துறையை பொறுத்தவரையில், 73 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியமாக, உத்திரமேரூர் ஒன்றியம் செயல்படுகிறது. இவற்றை இரண்டாக பிரித்து, சாலவாக்கத்தை தலைமையிடமாக கொண்ட புதிய ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்த வேண்டும் என, 10 ஆண்டு கால கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பலரும் மனு அளித்தும், உத்திரமேரூர் ஒன்றியத்தை இதுவரை பிரிக்காமலேயே உள்ளது. உத்திரமேரூர் போல வாலாஜாபாத் ஒன்றியமும் 61 ஊராட்சிகள் கொண்ட பெரிய ஒன்றியமாக உள்ளது.
இவற்றை பிரித்து, பரந்துார் தலைமையிடமாக கொண்டதாக புதிய ஒன்றியம் ஏற்படுத்த, உத்திரமேரரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், கடந்த 2021ல், அப்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், தற்போது உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியம் என, இரு ஒன்றியங்களும் இதுவரை பிரிக்கப்படவே இல்லை. பரந்துார், படுநெல்லி, நீர்வள்ளூர் போன்ற ஊர்களில் வசிப்போர், வாலாஜாபாத் செல்ல இரு பேருந்துகளில் பயணம் செய்து, பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.
கூட்டுறவுத்துறையில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் என, இரு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், சென்னை அயனாவரத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் எல்லையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களும் வருகிறது.
பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி, காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை தனியாக அமைக்க, 2023 - 24ல் நடந்த சட்டசபை அறிவிப்புகளில் வெளியிடப்பட்டது.
ஆனால், காஞ்சிபுரத்தில் போதிய பால் உற்பத்தியாளர்கள் இல்லை என்றும், புதியதாக ஒன்றியம் அமைத்தால் நஷ்டம் ஏற்படும் என, அந்த முடிவை கைவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையில், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் என, இரு காவல் கோட்டங்கள் உள்ளன. இதில், காஞ்சிபுரம் காவல் கோட்டத்தில், காஞ்சிபுரம் பகுதி மட்டுமல்லாமல், உத்திரமேரூர் சுற்றியுள்ள பெருநகர், மாகரல், சாலவாக்கம் போன்ற 10 காவல் நிலையங்கள் வருகின்றன.
இதனால், உத்திரமேரூருக்கு டி.எஸ்.பி., தலைமையில், தனியாக காவல் கோட்டம் ஒன்றை ஏற்படுத்த, இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே, காவல் துறை உயரதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். ஆனால், உத்திரமேரூர் கோட்டம் இதுவரை அறிவிக்கப்படவே இல்லை.
இதுபோல், நிர்வாக ரீதியிலான வசதிகள் பல்வேறு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய தேவை நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால், அரசின் மெத்தனம் காரணமாக, இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பால், பொதுமக்களுக்கு அலைச்சல் ஏற்படுவதோடு, அதிகாரிகளுக்கும் பணிச்சுமை அதிகமாகிறது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக நலன் கருதி, நிர்வாக மாற்றங்களை விரைந்து மேற்கொள்ள அரசு மேற்கொள்ளும் என, அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.