உத்திரமேரூரில் வளர்ச்சியடைந்த பாரத திட்டம் தொடக்கம்
உத்திரமேரூரில் வளர்ச்சியடைந்த பாரத திட்டம் தொடக்கம்
ADDED : ஜூலை 04, 2026 03:46 AM

உத்திரமேரூர்: பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் விக்சித் பாரத் திட்டத்தின் கீழ், கிராமபுறங்களில் ஆண்டுக்கு 125 நாள் வேலை வாய்ப்புக்கான பணிகள் உத்திரமேரூர் ஒன்றியத்தில் தொடங்கப்பட்டன.
வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி செய்து, ஏழை மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கிராமங்களின் நிலையான வளர்ச்சி, நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து மக்களுக்கு உறுதியான வேலை வாய்ப்பு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் ஒன்றியத்தில், பினாயூரில் திட்ட துவக்க விழா நடைபெற்றது.
அப்பகுதி மலையடிவாரம், ஏரிக்கரையொட்டி 1 ஏக்கர் பரப்பில் புதியதாக குளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையுடன் திட்டம் தொடங்கப் பட்டது.
ஊராட்சி தலைவர் வெங்கடேசன், உத்திரமேரூர் பி.டி.ஓ., மாணிக்கவேல், சுமதி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாறாக விக்சித் பாரத் திட்ட பெயரில் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை. பதிவு செய்த, 15 நாட்களுக்குள் வேலை மற்றும் வேலை முடிந்த, 15 நாட்களுக்குள் ஊதியம் போன்ற நடைமுறைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
