/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் சாலை படுமோசம் சகதியில் செல்லும் பக்தர்கள்
/
கோவில் சாலை படுமோசம் சகதியில் செல்லும் பக்தர்கள்
ADDED : டிச 09, 2024 01:26 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு செல்வதற்கு, 2 கி.மீ., துாரம் கிராமப்புற தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலையில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்லும் பிரதான சிமென்ட் சாலை செல்கிறது.
இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
கோவிலுக்கு செல்லும் சிமென்ட் சாலை, கடந்தாண்டு சேதமடைந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, கடந்தாண்டு ஊராட்சி நிர்வாகம் மண்ணை கொட்டி சமன்படுத்தி இருந்தது.
சாலையில் கொட்டி இருந்த மண்ணும், சமீபத்தில் பெய்த பெஞ்சல் புயலால் கரைந்து, சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சகதியில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே, கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்லும் சேதமடைந்த சாலையில், சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.