/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிதி இல்லாததால் நீர்நிலைகளை சீரமைப்பதில்...சிரமம்!:
/
நிதி இல்லாததால் நீர்நிலைகளை சீரமைப்பதில்...சிரமம்!:
நிதி இல்லாததால் நீர்நிலைகளை சீரமைப்பதில்...சிரமம்!:
நிதி இல்லாததால் நீர்நிலைகளை சீரமைப்பதில்...சிரமம்!:
UPDATED : அக் 21, 2024 07:23 AM
ADDED : அக் 21, 2024 01:32 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அணைக்கட்டு சீரமைப்பது, புதிய தடுப்பணை கட்டுவது, தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை அகற்றுவது ஆகியவற்றிற்கு அரசு நிதி ஒதுக்காததால், விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை விரைந்து மேற்கொள்ள முடியவில்லை என, நீர்வள ஆதாரத் துறையினர் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரி, குளம், ஆறு என நீர்நிலைகள் நிறைந்துள்ள மாவட்டம். இங்கு பராமரிக்கப்படும் நீர்நிலைகள் வாயிலாக, ஏரி பாசனம், ஆற்று பாசனம், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் என, பல வகையான நீர் ஆதார திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதனால், பாலாறு, செய்யாறு ஆகியவற்றையும், அதில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, அணைக்கட்டு ஆகியவற்றை பராமரிப்பது மிக முக்கியமாக உள்ளது.
ஆனால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை, அரசு சரியான காலத்தில் வழங்காமல் இழுத்தடிப்பதால், சீரமைப்பு மற்றும் புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாமல், நீர்வள ஆதாரத் துறையினர் புலம்புகின்றனர்.
சேதம்
உதாரணமாக, கடந்தாண்டு, 'மிக்ஜாம்' புயலின்போது ஏற்பட்ட ஏரி பாதிப்புகளை சீரமைக்க, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறையினர் கேட்ட நிதியில், சொற்ப அளவிலான நிதியே அரசு வழங்கியிருக்கிறது.
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், ஏரிகளை சீரமைக்கவில்லை என, அதிகாரிகளை கேள்வி கேட்டு, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். நிதி ஒதுக்கீடு இல்லை என, அதிகாரிகள் பதில் அளித்து ஒவ்வொரு மாதமும் சமாளிக்கின்றனர்.
l மாகரல் அருகேயுள்ள காவாந்தண்டலம் ஏரிக்கு தங்கு தடையின்றி தண்ணீரை கொண்டு செல்ல, 8 கோடி ரூபாய் மதிப்பில், வெங்கச்சேரி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே, 2017ல், புதிதாக அணைக் கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டின் ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர்வரத்து கால்வாய் வாயிலாக, காவாந்தண்டலம் ஏரிக்கு சீராக செல்லும் வகையில் கட்டப்பட்டது.
கடந்த 2021ல் பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமானது. கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமானதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி கொட்டும் இடத்தில், கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கின்றன. இதுமட்டுமல்லாமல், காவாந்தண்டலம் ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. ஏரிக்கு செல்லும் கால்வாயில் பெரிய அளவில் துவாரங்கள் உள்ளன.
இதனால், ஏரிக்கு செல்லும் தண்ணீர், மீண்டும் ஆற்றிலேயே வடிகிறது.
காவாந்தண்டலம் ஏரிக்கு புதிதாக கால்வாய் கட்டவும், சேதமான அணைக்கட்டை சீரமைக்கவும், தமிழக அரசிடம் மொத்தம் 17 கோடி ரூபாய் கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறையினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கருத்துரு அனுப்பி உள்ளனர்.
ஆனால், இதுவரை நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
l காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே, பழையசீவரம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, நான்கு ஆண்டுகளுக்கு முன், நீர்வள ஆதாரத் துறை, 42 கோடி ரூபாய் மதிப்பில், தடுப்பணை கட்டியது. இங்கு தடுப்பணை கட்டியதால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, அருகில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் சப்ளை செய்ய முடிகிறது.
ஆற்றிலிருந்து அடித்து வரப்பட்ட மணல், தடுப்பணையில் சேகரமாகி, தடுப்பணையின் உயரத்திற்கு சேர்ந்துள்ளது. 6 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட தடுப்பணையில், 1 அடி கூட ஆழம் இன்றி மணல் நிரம்பியுள்ளது.
தொடர் கோரிக்கை
இதனால், அதிகளவு தண்ணீர் நிரம்பாமல், வடிந்து செல்கிறது. தடுப்பணையில் சேகரமாகியுள்ள மணலை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நீர்வளத் துறை மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பியுள்ளனர். தடுப்பணையில் சேகரமாகியுள்ள மணலை அகற்ற, 3.3 கோடி ரூபாய் அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பருவமழையே சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், இந்த நிதியும் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.
l காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றில், பழையசீவரம் பகுதியில் மட்டுமே நான்கு ஆண்டுகளுக்கு முன், தடுப்பணை கட்டப்பட்டது. அதன்பின், பாலாற்றின் குறுக்கே எந்த இடத்திலும் தடுப்பணை கட்டப்படவில்லை.
காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் அல்லது விஷார் ஆகிய பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என, நீர்வளத் துறையினர், 30 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி பல ஆண்டுகளாகிறது. ஆனால், தடுப்பணை கட்ட நிதி ஏதும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.
நடவடிக்கை இல்லை
காஞ்சிபுரம் அருகே தடுப்பணை கட்டப்பட்டால், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும். ஆனால், நிதி ஒதுக்காததால், நீர்வள ஆதாரத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய தடுப்பணை கட்டவும், பழையசீவரம் தடுப்பணையில் மணல் அகற்றவும் ஏற்கெனவே கருத்துரு அனுப்பி விட்டோம். செய்யாற்றில் உள்ள அணைக்கட்டு சேதமானதை சீரமைக்கவும் நிதி கேட்டுள்ளோம். அரசு நிதி ஒதுக்கினால், அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சீரமைப்பு பணிகளுக்காகவும், தடுப்பணை உள்ளிட்ட பணிகளுக்காகவும், உயர் அதிகாரிகளிடம் நிதி ஒதுக்கீடு பற்றி நாங்கள் பேசி வருகிறோம். அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தண்ணீர் வருவதில் சிக்கல்!
காவாந்தண்டலம் ஏரிக்கு பல ஆண்டுகளாகவே தண்ணீர் வராமல் உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வராததால், நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம். செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வெங்கச்சேரி அணைக்கட்டில் இருந்து தான் தண்ணீர் வர வேண்டும். ஆனால், நீர்வரத்து கால்வாய் சேதமடைந்து உள்ளதால், தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.குமார்,
ஏரிநீர் பாசன சங்க தலைவர்,
காவாந்தண்டலம்.