ADDED : அக் 23, 2024 12:48 AM

காஞ்சிபுரம்:தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான தடகள போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டியை துவக்கி வைத்தனர்.
முதல் நாளான நேற்று. மாணவியருக்கான தடகள போட்டி நடந்தது. இதில், 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோர் என, மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீராங்கனையர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட 39 வகையான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், 3,000 மீட்டர் ஓட்டம், கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு, எம்.எல்.ஏ., எழிலரசன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மேலும், மாணவர்களுக்கான தடகள போட்டி இன்று நடக்கிறது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர், நவ., 6ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.