/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை விவகாரத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள்...கைகோர்ப்பு:டெண்டரை ரத்து செய்ய மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
/
குப்பை விவகாரத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள்...கைகோர்ப்பு:டெண்டரை ரத்து செய்ய மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
குப்பை விவகாரத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள்...கைகோர்ப்பு:டெண்டரை ரத்து செய்ய மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
குப்பை விவகாரத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள்...கைகோர்ப்பு:டெண்டரை ரத்து செய்ய மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
ADDED : நவ 06, 2025 10:42 PM

காஞ்சிபுரம்: 'குப்பை அகற்றும் பணியை தனியார் நிறுவனம் சரிவர மேற்கொள்ளாததால், காஞ்சிபுரம் முழுதும் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் ஆபத்து உள்ளதால், தனியார் நிறுவனத்திற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும்' என, தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் ஆவேசத்துடன் கோரிக்கை வைத்தனர்.
பல்வேறு விவகாரங்களில் எதிரும், புதிருமாக செயல்படும் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள், குப்பைக்கான டெண்டர் விவகாரத்தில் கைகோர்த்து செயல்பட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்கிய உடனே, பா.ஜ., கவுன்சிலர் விஜிதா, தன் வார்டில் எந்தவொரு பணியும் மாநகராட்சி முறையாக செய்யவில்லை எனவும், குப்பை, மழைநீர் கால்வாய் போன்ற எந்த பணியும் முறையாக செய்யவில்லை எனக்கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சண்முகானந்தம் - அ.தி.மு.க.,: என் வார்டில் கட்டப்படும் அரசு மருத்துவமனைக்கு கழிப்பறைகூட இல்லாமல் கட்டப்படுகிறது. கர்ப்பிணியர் வரக்கூடிய மருத்துவமனையில் கழிப்பறை கட்டவில்லை.
பாலசுப்ரமணியம் - கமிஷனர்: மத்திய அரசின் திட்டம் அது. மருத்துவமனை மட்டுமே திட்டத்தில் உள்ளது. கழிப்பறை வேறு நிதியில் கட்டி தரப்படும்.
சாந்தி - அ.தி.மு.க.,: என் வார்டில் போதுமான தெருவிளக்கு இல்லை. ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும், 15,000 ரூபாய் வரி செலுத்துகின்றனர். தெரு விளக்கு இல்லை என கேள்வி எழுப்புகின்றனர்.
மகாலட்சுமி - மேயர்: நிதி இன்னும் வரவில்லை. நிதி வந்தவுடன் தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
சாந்தி - தி.மு.க.,: 16வது வார்டில், குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது. பலரும் பாதிப்படையும் முன்பாக கவனிக்க வேண்டும்.
பாலசுப்ரமணியம் - கமிஷனர்: குழாய்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உடனடியாக சரி செய்யப்படும்.
கயல்விழி - தி.மு.க.,: 46வது வார்டில், 4 ஆண்டுகளில் ஒரே ஒரு டெண்டர் மட்டுமே விடப்பட்டு பணி நடந்துள்ளது. வசந்தம் நகரில் எந்த பணியும் நடக்கவில்லை. அதேபோல என் வார்டில், வணிக ரீதியிலான கட்டட அனுமதி ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலையில், எப்படி நடந்தது.
பாலசுப்ரமணியம் - கமிஷனர்: வணிக ரீதியிலான கட்டடங்களுக்கான ஆன்லைனில் அனுமதி கொடுக்க முடியாது. எப்படி நடந்தது என விசாரிக்கிறேன்.
கார்த்தி - தி.மு.க.,: அனுமதியற்ற விளம்பர பதாகைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காஞ்சிபுரத்திற்கு வர வேண்டிய 10 கோடி ரூபாய் வருவாய் பாதித்துள்ளது.
பாலசுப்ரமணியம் - கமிஷனர்: 14 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். விதிமீறல் விளம்பர பதாகை அமைத்த நிறுவனங்கள் மீது 15 நாட்களில் நட வடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் - தி.மு.க.,: கே.வி.கே., நடுநிலைப் பள்ளியிலும், குப்புசாமி ஆரம்ப பள்ளியிலும், கழிப்பறை கட்டுவதாக டெண்டர் விடப்பட்டு, சமையலறை கட்டப்பட்டது. டெண்டர் விடாமல், ஒரே மதிப்பீட்டில் எப்படி சமையலறை கட்டப்பட்டது. இதற்கு விளக்க கடிதம் கொடுக்க வேண்டும்.
பாலசுப்ரமணியம் - கமிஷனர்: இரண்டு கட்டடங்களுக்கும் மதிப்பீடு 10 சதவீதம் வித்தியாசம்தான் உள்ளது. அதனால், சமையலறை கட்டப்பட்டது.
சிந்தன் - அ.தி.மு.க.,: ஞானமணி என்ற ஒப்பந்ததாரர், மேயரின் உறவினர் எனக்கூறி, டெண்டர் எடுக்கும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை.
மகாலட்சுமி - மேயர்: அதுபோன்ற உறவினர் யாரும் எனக்கு இல்லை. பொதுவாக புகார் தெரிவிக்கக்கூடாது. என்னிடம் அவரை அழைத்து வாருங்கள். விசாரிக்கிறேன்.
குமரன் - தி.மு.க.,: நகர் முழுதும் பதிக்கப்படும் குடிநீர் குழாய்கள், ஆழமாக பதிக்கப்படுவதில்லை. சாலையிலிருந்து ஒரு அடிக்குள்ளாகவே பதிக்கப்படுகிறது. நாளடைவில் சேதமடையும்.
பன்னீர்செல்வம் - உதவி பொறியாளர்: உதவி பொறியாளர் சிவா என்பவரிடம் இதுபற்றி விசாரிக்கிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

