ADDED : பிப் 13, 2026 05:27 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரத்தில், மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது, நுாறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பு அருகே நடந்த ஆர்ப்பாட்டதில், தி.மு.க., -- காங்., மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதாக தி.மு.க., சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சுந்தர் தலைமை தாங்கினார். வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர், உத்திரமேரூர் ஒன்றிய செயலர் ஞானசேகரன், சாலவாக்கம் ஒன்றிய செயலர் குமார் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி செயலர் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எங்கே? எங்கே? தமிழ்நாட்டின் நிதி எங்கே? வரி மட்டும் வேண்டும்; நிதி தர முடியாதா? கல்வி நிதி ரூ.3,458 கோ-டி எங்கே? குடிநீர் நிதி ரூ.3,000 கோடி எங்கே? தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மறுக்கும் பா.ஜ.,; துணை போகும் அ.தி.மு.க., போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியினர் எழுப்பினர்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - வி.சி., - காங்., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
