/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிநீர் பாசன சங்க பதவிகளுக்கு தி.மு.க.,வினர் பட்டியல்...கபளீகரம்!:கண்துடைப்பு தேர்தல் நடத்துவதாக விவசாயிகள் குமுறல்
/
ஏரிநீர் பாசன சங்க பதவிகளுக்கு தி.மு.க.,வினர் பட்டியல்...கபளீகரம்!:கண்துடைப்பு தேர்தல் நடத்துவதாக விவசாயிகள் குமுறல்
ஏரிநீர் பாசன சங்க பதவிகளுக்கு தி.மு.க.,வினர் பட்டியல்...கபளீகரம்!:கண்துடைப்பு தேர்தல் நடத்துவதாக விவசாயிகள் குமுறல்
ஏரிநீர் பாசன சங்க பதவிகளுக்கு தி.மு.க.,வினர் பட்டியல்...கபளீகரம்!:கண்துடைப்பு தேர்தல் நடத்துவதாக விவசாயிகள் குமுறல்
ADDED : செப் 20, 2024 12:25 AM

காஞ்சிபுரம்:ஏரிநீர் பாசன சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சியினர் மும்முரமாக உள்ளனர். இதனால், இந்த சங்க தேர்தல், வெறும் கண்துடைப்பாகவே நடத்தப்படும் என, விவசாயிகள் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவமழைக்கு, நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் நிரம்பினால், 50,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஏரிநீரை, பாசனத்திற்கு திறந்து விடுவது, ஏரி துார் வாருவது, போக்கு கால்வாய் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரிநீர் பாசன சங்க தேர்தல் நடத்துவது வழக்கம்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 102 ஏரிக்களுக்கு, ஏரிநீர் பாசன சங்க தேர்தலை நடத்துவதற்கு, அத்துறை நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.
இதில், 102 ஏரிநீர் பாசன சங்க தலைவர் பதவி மற்றும், 480 ஆட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு நேற்று முன்தினம், ஏரிநீர் பாசன சங்க தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் மனு தாக்கல் செய்தனர்.
இன்று வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல். மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, மனுக்களை வாபஸ் பெறுதல்.
செப்., 30ம் தேதி காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையில் ஓட்டுப்பதிவு செய்தல். மாலை 4:00 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை அறிவித்தல் ஆகிய பணிகளை நீர்வள ஆதாரத் துறையினர் செய்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய தாலுகாக்களுக்கு, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., மற்றும் குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களுக்கு ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இருப்பினும், இந்த ஏரிநீர் பாசன சங்க தேர்தலுக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒரு புறம் பெயர் பட்டியலை தயாரித்து கட்சி மாவட்டச் செயலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஆளும் கட்சியினர் தயாரித்துள்ள பெயர் பட்டியல் படியே பதவிகள் வழங்கப்பட உள்ளதாக விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, பொறுப்புக்கு வரும் அரசியல் கட்சியினர் சிலர், விவசாயிகள் அல்லாத தனி நபர்களுக்கு வழங்கினால், எப்போது தண்ணீர் திறந்துவிட வேண்டும். எப்போது அடைக்க வேண்டும் என, விவசாயிகளின் நிலை புரிந்துக் கொள்வதில் கேள்விக்குறியாக இருக்கும் என, புலம்பலும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரிநீர் பாசன சங்க தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
இது ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் ஆளும் கட்சியினர் ஏரிநீர் பாசன சங்க தலைவராக யார் வரவேண்டும் என, அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெயர் பட்டியல் பெறும் பணியை சேகரித்து வருகின்றனர்.
இறுதியாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் கூறுபவரையே, ஏரி நீர் பாசன சங்க தலைவராக அறிவிக்க உள்ளனர்.
இதில், உண்மையான விவசாயி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதில்லை. ஏதேனும் ஒரு குறையை கண்டுபிடித்து மற்ற மனுக்களை நிராகரிக்க உள்ளனர்.
இதற்கு ஏன் தேர்தல் நடத்த வேண்டும். அப்படியே தலைவர்களை தேர்வு செய்துவிட்டு போகலாம். எதற்கு கண்துடைப்பு நாடகம் என, தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛வேட்பாளர்களிடம் மனுக்கள் பெற்று வருகிறோம். மனுக்கள் வாபஸ் பெறும் தேதி மற்றும் ஓட்டுப்பதிவுக்கு இன்னமும் நாட்கள் இருப்பதால், முடிவு குறித்து நாங்கள் ஒன்று சொல்ல முடியாது. இருப்பினும், முறையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.