/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைப்லைன் விரிசலால் சாலவாக்கத்தில் குடிநீர் வீண்
/
பைப்லைன் விரிசலால் சாலவாக்கத்தில் குடிநீர் வீண்
ADDED : நவ 11, 2024 11:37 PM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் ஊராட்சியில், ராஜீவ்காந்தி நகர், இந்திரா நகர், குரும்பரை, நெல்லிமேடு ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில் 5,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு, மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக குடிநீர் சேமிக்கப்பட்டு, பூமியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்புலிவனம் சாலை, சாலவாக்கம் காவல் நிலையம் எதிரே செல்லும் பைப்லைனில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக, சாலையிலே தண்ணீர் வீணாக செல்கிறது.
சாலையில் தண்ணீர் தேங்குவதால், கிருமிகள் குடிநீரில் கலந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட வழிவகுக்கும். மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சாலையிலே தண்ணீர் தேங்குவதால் ஒதுங்கி செல்ல முயலும் போது, எதிரே வரும் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே விரிசல் ஏற்பட்ட பைப்லைனை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

