/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் பறக்கும் புழுதி விவசாய பயிர்கள் பாதிப்பு
/
சாலையில் பறக்கும் புழுதி விவசாய பயிர்கள் பாதிப்பு
ADDED : பிப் 09, 2025 08:48 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் மதுார், சிறுமையிலுார், சிறுதாமூர், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில், தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இங்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள், பட்டா, அருங்குன்றம், மதுார், பழவேரி மற்றும் திருமுக்கூடல் பாலாற்று பாலம் வழியாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
கனரக வாகனங்களில் அதிக பாரம் மற்றும் தார்ப்பாய் போர்த்தாதது போன்ற விதிமீறல்களால், சாலைகள் சேதமாவதோடு, சாலையோரம் உள்ள மரங்களில் மண் புழுதி படிந்த வண்ணம் உள்ளன. இதனால், சாலையோர மரங்கள் காய்ந்து பட்டு போகிறது.
இதன் காரணமாக, சாலையோரம் நிழல் இல்லாமல் வாகன ஓட்டிகள் வெயில் நேரங்களில் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலைகளில் ஏற்படும் மண்புழுதி, விவசாய நிலங்களிலும் பரவுகிறது.
இதனால், சாகுபடி பயிர்கள் வளர்ச்சி அடையாமல், பூவெடுக்கும் பருவத்தில் கருகி போவதாகவும், இதன் காரணமாக விவசாயம் மேற்கொள்வது பெரும் சவாலாக இருப்பதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே, இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மண் புழுதியை கட்டுப்படுத்ததுல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.