/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் வாயில் மண் கொட்டி...ஆக்கிரமிப்பு!:மாங்காடு, குன்றத்துாருக்கு வெள்ள அபாயம்
/
மழைநீர் வடிகால் வாயில் மண் கொட்டி...ஆக்கிரமிப்பு!:மாங்காடு, குன்றத்துாருக்கு வெள்ள அபாயம்
மழைநீர் வடிகால் வாயில் மண் கொட்டி...ஆக்கிரமிப்பு!:மாங்காடு, குன்றத்துாருக்கு வெள்ள அபாயம்
மழைநீர் வடிகால் வாயில் மண் கொட்டி...ஆக்கிரமிப்பு!:மாங்காடு, குன்றத்துாருக்கு வெள்ள அபாயம்
ADDED : செப் 12, 2024 02:08 AM

குன்றத்துார்:மழைநீர் வடிகால்வாயில் மண் கொட்டி மூடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மழைக்காலத்தில் குன்றத்துார், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில், வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன், கால்வாயை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்த ஏரியின் கரை, குன்றத்துார் அருகே, நந்தம்பாக்கம் முதல், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் கிராமம் வரை, 8 கி.மீ., நீளத்திற்கு உள்ளது.
சுருங்கிவிட்டன
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றும் 8 மதகுகள், கரையில் உள்ளன. இங்கிருந்து துவங்கும் 18 கால்வாய்கள், இறுதியாக அடையாறு ஆற்றில் சேர்கின்றன.
இந்த 18 கால்வாய்கள் வாயிலாக, 25 ஆண்டுகளுக்கு முன், மாங்காடு, கொல்லச்சேரி, பெரியபணிச்சேரி உட்பட பல கிராமங்களில் விவசாய நிலத்திற்கு, தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
மேலும், மழைக்காலத்தில் மேற்கண்ட பகுதிகளில் தேங்கும் மழைநீர், இந்த கால்வாய் வழியே, அடையாற்றில் கலக்கும். இந்த பகுதியில் 98 சதவீத விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக உள்ளன.
தவிர, 18 கால்வாய்கள், பல இடங்களில் ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டன. இதனால், மழைக்காலத்தில் குன்றத்துார், மாங்காடு சுற்றியுள்ள புறநகர் பகுதியில், வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, குன்றத்துார் அருகே, கொல்லச்சேரியில் மழைநீர் வடிகால்வாயாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் கால்வாயை ஆக்கிரமித்து, மண் கொட்டி மூடி சமன் செய்து விட்டனர்.
இந்த கால்வாயில் கொல்லச்சேரி, மூன்றாம்கட்டளை, இரண்டாம் கட்டளை பகுதியில், அதிக ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டு உள்ளன.
வெள்ள பாதிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மலையம்பாக்கம், கொல்லச்சேரி குடியிருப்பு பகுதி வரை 5 - 10 அடி அகலத்திற்கு கால்வாய் உள்ளது. அதன்பின், கொல்லச்சேரியில் இருந்து, மூன்றாம்கட்டளை வரை 200 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் இருக்கும் தடயமே தெரியாத அளவிற்கு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், வரும் வடகிழக்கு பருவமழையின் போது கொல்லச்சேரி, மலையம்பாக்கம், கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், மூன்றாம்கட்டளை, இரண்டாம்கட்டளை பகுதிகளில் வெள்ள நீர் சூழும் ஆபத்து உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் ஏரியின் 8 மதகுகளில் இருந்து செல்லும் 18 கால்வாய்களையும், பல இடங்களில் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், கொல்லச்சேரி, மாங்காடு, பரணிபுத்துார், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், அதை சுற்றியுள்ள பகுதியில், ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, பருவமழைக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை துார்வார வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து செல்லும் கால்வாய்களை, ஒவ்வொன்றாக துார்வாரும் பணிகள் நடக்கின்றன. ஆக்கிரமிப்புகள் உள்ள இடத்தை வருவாய் துறை வாயிலாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.

