/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புழுதி பறக்கும் மேம்பால சாலை பழையசீவரத்தில் அவதி
/
புழுதி பறக்கும் மேம்பால சாலை பழையசீவரத்தில் அவதி
ADDED : டிச 22, 2024 12:14 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்து பழையசீவரம்- திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே மேம்பால சாலை உள்ளது.
திருமுக்கூடல் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், இரவு, பகலாக இந்த பாலத்தின் வழியாக பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களில் இருந்தும், தார்ப்பாய் போர்த்தாத லாரிகளில் இருந்தும் கீழே சிதறும் எம்.சான்ட் உள்ளிட்டவை பாலத்தின் சாலையில் பரவி கிடக்கின்றன.
இவை, வாகனங்கள் இயக்கத்தின் போது, காற்றின் வேகத்திற்கு மண் புழுதியாக பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்கிறது.
வாகன ஓட்டிகளின் கண்களில் மண் விழுந்து, முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாமல் விபத்திற்குள்ளாகும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, பழையசீவரம்- திருமுக்கூடல் மேம்பால சாலையில், இடைவிடாமல் பறக்கும் மண் புழுதியை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.