ADDED : ஜூன் 17, 2025 12:18 AM
உத்திரமேரூர், சடச்சிவாக்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் மூதாட்டி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, களியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள், 67. இவர், நேற்று, தன்னுடைய உறவினர் வீடான வேடவாக்கம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இருசக்கர வாகனத்தை வேடவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, 32, ஓட்டிச் செல்ல, அவரின் தாயார் செல்லம்மாள், 65, நடுவிலும், களியானுாரை சேர்ந்த செல்லம்மாள், பின் இருக்கையிலும் அமர்ந்து சென்றனர்.
பின், இருசக்கர வாகனமானது நெல்வாய் சாலையில் உள்ள சடச்சிவாக்கம் பகுதியில் சென்றபோது, முன்னே சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றது.
அப்போது, இருசக்கர வாகனமானது டிராக்டர் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில், களியானுாரை சேர்ந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், இருசக்கர வாகனத்தில் சென்ற ஏழுமலை மற்றும் அவரின் தாயார் செல்லம்மாள் ஆகியோருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.