/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை தீக்கிரை ரூ.5 கோடி பொருள் நாசம்
/
தொழிற்சாலை தீக்கிரை ரூ.5 கோடி பொருள் நாசம்
ADDED : ஜன 12, 2024 11:55 PM

வாலாஜாபாத்,காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லுாரில், 'பொக்கே' உள்ளிட்ட செயற்கை ரசாயன முறை பூச்செண்டு போன்ற அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்து தொழிலாளர்கள் புறப்பட்ட நிலையில், காவலாளிகள் மட்டும் பணியில் இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், தொழிற்சாலைக்குள் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறி உள்ளது.
காவலாளிகள் உள்ளே சென்று பார்த்த போது, தொழிற்சாலையின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்த தகவலின்படி வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், உற்பத்தி செய்து வைத்திருந்த அலங்கார பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் உட்பட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.