/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் ஒயர்கள் திருட்டால் விவசாயிகள் பாதிப்பு
/
மின் ஒயர்கள் திருட்டால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : டிச 19, 2025 05:53 AM
உத்திரமேரூர்: பழவேரி மற்றும் அருங்குன்றம் கிராம விவசாய நிலங்களில், மின் மோட்டார் மற்றும் இணைப்பு ஒயர்களை மர்ம நபர்கள் திருடி செல்வதால் சாகுபடி பாதிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேரி, அருங்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். நடப்பாண்டில் பருவ மழையை தொடர்ந்து தற்போது நாற்று விடுதல், நெல் விதைத்தல் மற்றும் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களாக இப்பகுதி விவசாய கிணறுகளில் மோட்டாருக்கு பொருத்தப்படும் ஒயர்கள் மற்றும் மின்கம்பத்தில் இருந்து, பம்ப்செட்டில் உள்ள மோட்டாருக்கான இணைப்பு ஒயர்களை மர்ம நபர்கள் துண்டித்து திருட்டில் ஈடுபடுவதாக புகார் எழும்பி உள்ளது.
பழவேரி விவசாயிகள் கூறியதாவது:
இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளதால் ஒரு மாதமாக விவசாய நிலங்களுக்கு காவல் செல்வதில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி அச்சமயங்களில் மர்ம நபர்கள் பியூஸ்கேரியர்கள் மற்றும் மோட்டார் மின் ஒயர்கள் உள்ளிட்டவை திருடி செல்கின்றனர்.
இதனால், சாகுபடி செய்யும் நிலங்களுக்கு உடனடியாக நீர் பாய்ச்ச இயலாமல் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

