/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காட்டு பன்றிகளால் நாசமான கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு பாதித்த விவசாயிகள் மனு அளிக்க அறிவுறுத்தல்
/
காட்டு பன்றிகளால் நாசமான கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு பாதித்த விவசாயிகள் மனு அளிக்க அறிவுறுத்தல்
காட்டு பன்றிகளால் நாசமான கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு பாதித்த விவசாயிகள் மனு அளிக்க அறிவுறுத்தல்
காட்டு பன்றிகளால் நாசமான கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு பாதித்த விவசாயிகள் மனு அளிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2025 02:20 AM

சீட்டணஞ்சேரி:'காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரும்பு அதிகம் பயிரிடப்படும் சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில் காட்டுப்பன்றிகள் தாக்குதலால் நாசமான கரும்பு பயிர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமான கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு பெற வனச்சரக அலுவலகத்திற்கு மனு அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர், அரும்புலியூர், ஆத்தங்கரை, குருமஞ்சேரி, களியப்பேட்டை, கரும்பாக்கம், காவூர், காவாந்தண்டலம், ராஜம்பேட்டை, திருவானைக்கோவில், விச்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் விவசாயிகள் அதிக அளவு கரும்பு பயிரிடுகின்றனர்.
இப்பகுதிகளில் பயிரிடும் கரும்புகளை, அறுவடைக்கு பின், மதுராந்தகம் அடுத்த, படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அரவைக்கு அனுப்புகின்றனர்.
இதனால், சீட்டணஞ்சேரி சுற்றுவட்டார கிராமங்கள், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முக்கிய கரும்பு மண்டலமாக திகழ்கிறது.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் அரவை செய்யப்படும் மொத்த கரும்புகளில், 40 சதவீதம், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலம் வாயிலாக உற்பத்தி செய்கின்ற கரும்புகளாக உள்ளன.
கரும்பில் இருந்து மாற்று பயிர் சாகுபடிக்கு காரணமாக ஆட்கள் தட்டுப்பாடு, கட்டுப்படியாகாத விலை போன்றவற்றை கூறிவந்த நிலையில் தற்போது அவைகளை தாண்டி காட்டுப் பன்றி தொந்தரவு முக்கிய காரணியாக உள்ளது.
கடந்த ஆண்டுகளில், இங்குள்ள சாத்தணஞ்சேரியில் மட்டும் 1.000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்ட நிலையில், இந்த ஆண்டு சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில் மொத்தமாக 300 ஏக்கரில் மட்டும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது பாதி வளர்ச்சியை எட்டி உள்ளது.
இந்நிலையில், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் கரும்பு தோட்டத்திற்குள் கூட்டமாக புகுந்திடும் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருகின்றன.
கரும்பு தோட்டங்களில் காட்டு பன்றிகளால் நாசமான கரும்புகளை அப்பகுதி விவசாயிகள் ஆட்களை வைத்து அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து, கடந்த 23ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக, உத்திரமேரூர் வனச்சரக அலுவலர்கள், சீட்டணஞ்சேரியில் காட்டுப் பன்றிகளால் சேதமான கரும்பு தோட்டங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, கரும்பு விவசாயிகள் தங்களது பிரச்னைகள் குறித்து அவர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.
சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயியும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைருமான தனபால் கூறியதாவது:
தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக கரும்பு சாகுபடியில், மஞ்சள் இலை நோய், கரும்பு தோட்டத்தில் வெள்ளை ஈக்கள் தாக்கம்,போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
இவ்வாறான நோய் தாக்குதல்களில் இருந்து, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மூலம் கரும்புகளை பாதுகாத்தும் காட்டுப் பன்றிகளிடம் பறி கொடுத்து விடுகிறோம்.
சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில், இதுவரை காட்டுப் பன்றிகள் வாயிலாக 60 ஏக்கர் நிலப்பரப்பிலான கரும்புகள் தேசம் அடைந்துள்ளன.
சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது அவசியம்தான். எனினும், அது மட்டும் தீர்வு கிடையாது.
விவசாயத்திற்கு பெரும் எதிரியாக உருவெடுத்துள்ள காட்டுப் பன்றிகளை விரட்டி அடிக்கவும், சுட்டு வீழ்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியதாவது:
சீட்டணஞ்சேரியில் காட்டுப் பன்றிகளால் சேதமான கரும்பு தோட்டங்களை பார்வையிட்டோம். காட்டுப் பன்றிகளால் நாசமான கரும்புகள் குறித்து, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், உத்திரமேரூரில் உள்ள வனச்சரகம் அலுவலகத்திற்கு நேரில் வந்து நிலத்தின் பட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் மனு அளிக்க வேண்டும்.
அவ்வாறு அளிக்கப்படும் மனுக்களின் பேரில், அப்பகுதிக்கு நேரில் சென்று கரும்பு சேதாரம் குறித்து அளவீடு செய்து அதை அரசு பரிந்துரைக்கு அனுப்பி வைத்து பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.