/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புலிவாய் ஏரியை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
/
புலிவாய் ஏரியை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : மே 18, 2025 01:48 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, புலிவாய் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 250 ஏக்கர் பரப்பளவு உடையது. பருவ மழை நேரங்களில் இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது, இந்த தண்ணீரை பயன்படுத்தி, 300 ஏக்கர் பரப்பளவு, விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியின் மையப் பகுதியில் அப்பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, இந்த ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் தூர்ந்து, பருவ மழை நேரங்களில் தேவையான தண்ணீர் சேகரமாக முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், குறைந்த அளவில் சேகரமாகும் தண்ணீரை கொண்டு ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்யமுடிகிறது. மேலும், ஏரியில் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் சேகரமாக தடையாக உள்ளது.
தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில் ஏரியானது தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி, புலிவாய் ஏரியை தூர்வார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.