/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிற்கு விற்ற நெல்லுக்கு... பணம் கிடைக்கலை:ஒரு மாதமாக அலையவிடுவதால் விவசாயிகள் அதிருப்தி
/
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிற்கு விற்ற நெல்லுக்கு... பணம் கிடைக்கலை:ஒரு மாதமாக அலையவிடுவதால் விவசாயிகள் அதிருப்தி
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிற்கு விற்ற நெல்லுக்கு... பணம் கிடைக்கலை:ஒரு மாதமாக அலையவிடுவதால் விவசாயிகள் அதிருப்தி
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிற்கு விற்ற நெல்லுக்கு... பணம் கிடைக்கலை:ஒரு மாதமாக அலையவிடுவதால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஏப் 27, 2025 02:10 AM
காஞ்சிபுரம்:தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழு கட்டுப்பாட்டில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் விற்ற விவசாயிகளுக்கு ஒரு மாதமாகியும் பணம் வரவில்லை. இதனால், அடுத்த பருவத்திற்கு சாகுபடி செய்ய பணமின்றி, விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சொர்ணவாரி பருவத்தில், தண்ணீர் பற்றாக்குறை, கோடை வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 30,000 ஏக்கர் பரப்பளவில் மட்டும், விவசாயிகள் நெல் சாகுபடி செய்வர். ஒவ்வொரு பருவத்திற்கும், நெல் அறுவடை செய்யும்போது, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குகின்றனர். இதன் வாயிலாக, கணிசமாக நெல் கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி கூட்டுறவு துறைக்கு கொடுத்து விடுகின்றனர்.
இதில், நவரை பருவத்திற்கு மட்டும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், மாவட்டம் முழுதும் துவக்க அனுமதி அளிக்கின்றனர்.
நுகர்பொருள் வாணிப கழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினரும், நவரை பருவத்திற்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கின்றனர்.
அதன்படி, நுகர்பொருள் வாணிப கழத்தினர் கட்டுபாட்டில், 95 நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் கட்டுப்பாட்டில், 33 நெல் கொள்முதல் நிலையங்கள் என மொத்தம், 128 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில், நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளுக்கான பணம், ஒரு வாரத்திற்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஆனால், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளுக்கு, ஒரு மாதத்திற்கு மேலாகியும் பணம் விடுவிக்கப்படவில்லை.
இதனால், கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், அறுவடைக்கான கூலி தொகையை கூட தர முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தவிர, அடுத்த பருவத்திற்கு சாகுபடி செய்ய பணம் இல்லாமல், விவசாயிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
சில ஆண்டுகளாக, கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை போட்டதும் ஒரு வாரத்திற்குள் பணம் வந்துவிடுகிறது.
ஆனால், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினருக்கு நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டதோ, அந்த நிலையத்தில் நெல் வீற்றாலும், பணம் விரைவில் கிடைப்பதில்லை. கடந்த மார்ச் மாதம் விற்ற நெல்லுக்கு பணம் வந்து சேரவில்லை. அடுத்த, சொர்ணாவாரி பருவத்திற்கு, பயிர் சாகுபடி செய்ய பணம் இல்லை. இப்படி இருந்தால், அடுத்த பருவ சாகுபடிக்கு எப்படி தயாராவது என புரியவில்லை.
எனவே, நெல் விற்றால், ஒரு வாரத்திற்குள் பணத்தை விடுவிக்க, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினருக்கு விற்ற நெல் மூட்டைகளுக்கு, பணம் வரவில்லை என்பது உண்மை தான்.
நாங்கள் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, மூன்று தினங்களில் பணம் விடுவித்து விடுகிறோம். கடந்த 20ம் தேதி வரை நெல் மூட்டைகளை விற்ற விவசாயிகளுக்கு பணம் விடுவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த மார்ச் மாதம் வரை, நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணம் அனுப்பி உள்ளோம். இந்த மாதத்திற்குரிய பட்டியல் மாத இறுதியில் எடுத்து, பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
சர்வாதிகார நடப்பதாக குற்றச்சாட்டு
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழு கட்டுப்பாட்டில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் எத்தனை முறை புகார் அளித்தாலும், அவர்கள் செவி சாய்ப்பதில்லை.
அங்கு, நெல் கொள்முதல் நிலையம் நடத்தும் நபரின் அதிகாரம் தான் செல்லுபடியாகிறது. அவர்கள் வைத்தது தான் சட்டம், சர்வாதிகாரிகளை போல் நடந்துக்கொள்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.