/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகத்திற்கு 1,514 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வேலி
/
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகத்திற்கு 1,514 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வேலி
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகத்திற்கு 1,514 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வேலி
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகத்திற்கு 1,514 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வேலி
ADDED : ஏப் 03, 2025 01:51 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12.98 கோடி ரூபாய் வரையறுக்கப்பட்ட குடிநீர் பணிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஊராட்சிகளில் வினியோகம் செய்யப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒரு முறை மத்திய மற்றும் மாநில நிதிக்குழு மானியம் வழங்குகிறது.
இந்த நிதியை, இரு தவணைகளாக பிரித்து, அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில், 60 சதவீதம் வரையறைக்கப்பட்ட பணிகள், 40 சதவீதம் வரையறுக்கப்படாத பணிகள் என, 100 சதவீதம் பணிகளை ஊரக வளர்ச்சி துறையினர் செய்து வருகின்றனர்.
குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகள் செய்வதற்கு, 60 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியை பயன்படுத்தி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஏற்கனவே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு விதமான குடிநீர் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகள் செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு குடிநீர் மற்றும் சுகாதார பணிகளுக்கு, மத்திய நிதிக்குழு மானியத்தில், 12.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில், பணிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முதற்கட்டமாக மாவட்டத்தில் இருக்கும், 1,514 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக, வேங்கைவாசல், மத்துார் உள்ளிட்ட கிராமங்களில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில், மனித கழிவுகளை கலந்ததாகவும். குரங்கு, அனில் உள்ளிட்ட விலங்குகள், காக்கா, குருவி உள்ளிட்ட பறவையினங்களால் ஊராட்சிகளின் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்படுகிறது. இதை முறையாக பராமரிப்பு செய்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோன்ற புகார்களை தவிர்க்க, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றிலும் பாதுகாப்பு வேலி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்த அனுமதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் இருக்கும், 274 ஊராட்சிகளில், 1,500க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணி துவங்கியுள்ளன.
இந்த பணிகள் நிறைவு பெற்றால், ஊராட்சிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் உறுதி செய்யப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
அரசு நிதிகளில் கட்டப்பட்டிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றிலும், 15வது மத்திய நிதிக்குழு மானியத்தில், தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
இந்த பணிகள் நிறைவு பெற்றால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் அருகே ஆடு, மாடு கட்டுவது, முறைகேடாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறுவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும்.
மேலும், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வது உறுதிபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.