/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் சேதத்தால் வீணாகும் வெள்ள நீர்
/
கால்வாய் சேதத்தால் வீணாகும் வெள்ள நீர்
ADDED : அக் 31, 2025 11:35 PM

காஞ்சிபுரம்: ஆண்டி சிறுவள்ளூர் நீர்வரத்து கால்வாயில் சேதம் ஏற்பட்டிருப்பதால், வயலில் புகும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாம்புரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் வட்டங்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது, கம்பன் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர், காட்டுப்பட்டூர் ஏரி நிரப்பி விட்டு, ஆண்டி சிறுவள்ளூர் நீர் வரத்து கால்வாய் வழியாக ஏரியை சென்றடையும்.
சிறுவாக்கம் கூட்டு சாலை அருகே, கால்வாய் கரை உடைந்திருப்பதால், ஆண்டி சிறுவள்ளூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், வயலில் புகுந்து செல்கிறது.
இதனால், ஆண்டிசிறுவள்ளூர் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நீர்வளத் துறையினர் ஆய்வு செய்து, வெள்ள நீரை சேமிக்க வழி வகை செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

