/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவகால மாற்றத்தால் பரவும் காய்ச்சல் மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
/
பருவகால மாற்றத்தால் பரவும் காய்ச்சல் மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
பருவகால மாற்றத்தால் பரவும் காய்ச்சல் மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
பருவகால மாற்றத்தால் பரவும் காய்ச்சல் மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
ADDED : ஜன 16, 2025 07:21 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து, குளிர்காலம் துவங்கியுள்ளது.
மேலும், கடந்த இரு நாட்கள் லேசான மழையும் பெய்து வருகிறது. மாவட்டம் முழுதும் பருவநிலை மாற்றம் காரணமாக, காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இரவில் ஏற்படும் குளிர்ச்சியான காலநிலையால், பலருக்கும் ஜலதோஷம் ஏற்படுவதுடன், அது காய்ச்சலாகவும் மாறுவதால், பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தாலுகா மருத்துவமனைகளிலும், தனியார் கிளினிக்குகளிலும், காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், அன்றாடம் வழக்கமாக வரும், 3,000க்கும் மேற்பட்ட புற நோயாளிகளை காட்டிலும், அதிமானோர் வருகின்றனர்.
மாவட்டம் முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 200, 300 பேர் என, வழக்கத்தை காட்டிலும், கூடுதலாக புற நோயாளிகள் வருகின்றனர்.
அதாவது, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், சராசரியாக 100 நோயாளிகள் தினசரி அதிகமாக வருவதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது, சாதாரண வைரஸ் காய்ச்சல் மட்டுமே என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேசமயம், டெங்கு காய்ச்சல், டைபாய்ட் போன்றவையும் பரவுகிறது.
இருப்பினும், அச்சப்பட தேவையில்லை என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மாவட்டம் முழுதும் கொசு உற்பத்தியும் அதிகமாகியுள்ளதால், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கொசுவை கட்டுப்படுத்தவும், அதை அழிக்கவும் தேவைப்படும் கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் கூட, பல ஊராட்சிகளிடம் இல்லை.
காய்ச்சல் தொடர்பாக ஏற்படும் பீதியை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
காய்ச்சல் பரவும் இடங்களில், மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுதும், காய்ச்சலால் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தற்காலிகமாக பணியாற்றும் மஸ்துார்களை நியமிக்கலாம்.
காய்ச்சல் தீவிரமாக இருந்த சமயங்களில், முந்தைய ஆண்டுகளில் மஸ்துார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்ற நடவடிக்கைகளை, இப்போதே எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலருக்கும் சாதாரண வைரஸ் காய்ச்சலே உள்ளது. அச்சப்படும் வகையிலான காய்ச்சல் ஏதும் பரவவில்லை. குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
காய்ச்சல் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். அவ்வாறு சரியாகவில்லை என்றால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, மருத்துவரை சந்திக்க வேண்டும்.
மருந்து கடைகளில் தாமாக மருந்து ஏதும் வாங்கி உட்கொள்ள கூடாது. பலருக்கும், இப்போது வருவது பருவகால காய்ச்சல் தான்.
- சுகாதாரத்துறை அதிகாரி,
காஞ்சிபுரம்.