/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு அனுமதி!:4 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
/
காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு அனுமதி!:4 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு அனுமதி!:4 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலைக்கு அனுமதி!:4 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
UPDATED : ஏப் 05, 2024 10:37 AM
ADDED : ஏப் 04, 2024 11:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, பைபாஸ் சாலை அமைக்கும் பணிக்கு, ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இந்த பணிகளை நான்கு மாதங்களில் முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சி ராஜவீதி வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, சதுக்கம் வழியாக வாலாஜாபாத் - வண்டலுார் சாலை வழியாக, தாம்பரம் செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
ஒரே நேரத்தில், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் எதிர் வரும் வாகனங்கள் மற்றும் டிப்பர் லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பால், வாலாஜாபாதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதைத் தவிர்க்க, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, பல தரப்பு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், 141.59 கோடி ரூபாய் செலவில், வாலாஜாபாத் பைபாஸ் என, அழைக்கப்படும் புறவழிச் சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை விரிவுபடுத்தும் பணி கடந்த, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் துவக்கப்பட்டு உள்ளது.
இந்த பைபாஸ் சாலையை, 2024ம் ஆண்டு மார்ச்- 31ல் பணிகள் நிறைவு செய்ய வேண்டும் என, திட்டமிடப்பட்டது. ஆனால், 50 சதவீத பணிகள் நிறைவு செய்யப்படவில்லை.
மேலும், மின்சார ரயில் வழித்தடத்தின் குறுக்கே, மேம்பாலம் கட்டும் பணி இழுபறியாக உள்ளது.
இதனால், பைபாஸ் சாலை போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ரயில்வே மின் வழிதடத்தின் மீது மேம்பாலம் அமைக்க துறை நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட உள்ளன,'' என்றார்.
இதுகுறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை ரயில் கடவுப்பாதைகளில், ரயில் மேம்பாலம் அமைக்க, சமீபத்தில் ரயில்வே துறை நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
இரு இடங்களிலும், கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இதில், கிதிரிப்பேட்டை கடவுப்பாதையில் மட்டும், சிக்னலில் மாற்று இணைப்பு ஏற்படுத்திய பின், கட்டுமான பணிகள் துவங்கும்.
புளியம்பாக்கம் ரயில் கடவுப்பாதையில் சிக்னல் மாற்றம் செய்யும் பணி இல்லாததால், உடனடியாக துவக்கப்படும். இந்த இரண்டு பணிகளையும் நான்கு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, பைபாஸ் சாலை போடும் பணிக்கு விமோசனம் கிடைக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, வாலாஜாபாத் பைபாஸ் சாலை போடும் பணியை நிறைவு செய்துவிட்டால், ராஜவீதி, வாலாஜாபாத் சதுக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இனி மேல், கனரக வாகனங்களால் அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
- கே.வேல், வாலாஜாபாத்

