/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு திட்ட வீடு கட்டுவோரிடம் ரூ.20,000 கட்டாய வசூல்...அடாவடி:தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு
/
அரசு திட்ட வீடு கட்டுவோரிடம் ரூ.20,000 கட்டாய வசூல்...அடாவடி:தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு
அரசு திட்ட வீடு கட்டுவோரிடம் ரூ.20,000 கட்டாய வசூல்...அடாவடி:தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு
அரசு திட்ட வீடு கட்டுவோரிடம் ரூ.20,000 கட்டாய வசூல்...அடாவடி:தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : மே 22, 2025 01:00 AM

காஞ்சிபுரம்:கனவு இல்லம், பிரதமர் வீடு கட்டும் திட்டங்களில் வீடு கட்ட பணி ஆணை பெறும் பயனாளிகளிடம், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், வீட்டுக்கு 20,000 ரூபாய் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வீட்டு கட்டுமான செலவு அதிகரிப்பதாக பயனாளிகள் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பழங்குடியினருக்கு வீடு வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசின் கனவு இல்லம் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த 2024 - 25ம் நிதி ஆண்டில் கனவு இல்லம் திட்டத்தில் 2,855 பேருக்கு வீடு; பிரதமர் குடியிருப்பு திட்டத்தில், 584 பேருக்கு வீடுகள் மற்றும், 2023 - 24ம் நிதி ஆண்டில் பழங்குடியினருக்கு 368 வீடுகள் என மொத்தம், 3,807 வீடுகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய, மாநில அரசு திட்டங்களில் வீடு கட்டுவோருக்கு, மானிய விலையில் கட்டுமான பொருட்களை அரசு வழங்கி, பணிகளை ஊக்குவித்து வருகிறது.
கோஷ்டி பூசல்
பிரதமர் வீடு மற்றும் கனவு இல்லம் திட்டத்திற்கு, தலா 104 சிமென்ட் மூட்டைகள், 320 கிலோ கம்பி ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதில், 352 சதுர அடியில் படுக்கை, வரவேற்பு, சமையல், கழிப்பறை என, கட்ட வேண்டும். அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி குறைவாக தான் உள்ளது.
இருப்பினும், பயனாளிகள் ஒரு முறை தான் வீடு கட்டப் போகிறோம் என, கூடுதல் பணம் செலவழித்து தரமான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர்.
இதுபோன்ற நேரத்தில், ஒரு வீட்டிற்கு 20,000 ரூபாய் வரை கட்டணத்தை நிர்ணயம் செய்து, அரசியல் கட்சியினர் பணம் வசூலிக்க துவங்கியுள்ளனர்.
நடப்பாண்டு வழங்கப்பட்ட 3,836 பேருக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் ஆணை வழங்கும்போது, தலா 20,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என பயனாளிகளிடம், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பணம் வசூலிப்பதில், ஊராட்சி தலைவர்களுக்கும், ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம், கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர்கள், பணி ஆணை பெறுவதற்கு பயனாளிகளை அழைத்து செல்லும்போது, 'நான் இல்லை என்றால் உங்களுக்கு வீடு வந்திருக்காது. ஆகையால் ஒரு வீட்டிற்கு 20,000 ரூபாய் கொடுத்தால் போதும். நான் அதிகம் கேட்கவில்லை' என, நைசாக பேசி வாங்குகின்றனர்.
அதேபோல, 'எங்கள் ஆட்சியில், உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து கொடுத்திருக்கிறோம். மேலும், தடையின்றி 'பில்' எனும் பணத்தை விடுவிக்கவும் பரிந்துரை செய்ய வேண்டும்.
ஆகையால், எங்களிடமே பணம் கொடுங்கள்' என, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள், பயனாளிகளின் வீட்டிற்கே சென்று பணம் கேட்கின்றனர்.
இதனால், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊராட்சி தலைவர், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் இடையே 'பஞ்சாயத்து' ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றுகிறது.
இவர்களால் வீடு கட்டும் பணி பாதிக்கப்படுமோ என, பீதியடையும் மக்கள், அவர்கள் கேட்கும் தொகையை தந்து, அதை பங்கிட்டு கொள்ளச் சொல்கின்றனர்.
சொர்ப்பமான பணம்
இதுகுறித்து, வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த கனவு இல்ல திட்ட பயனாளிகள் சிலர் கூறியதாவது:
அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு, குறைந்த நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், கம்பி, சிமென்ட் ஆகிய பொருட்களுக்கு பிடித்தம் போக சொர்ப்பமான பணமே கிடைக்கிறது.
இதில், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் என, போட்டி போட்டு வீட்டிற்கு வந்து பணம் கேட்டால், நாங்கள் எங்கே செல்வது. வீட்டு கட்டுமான பணியை முடிப்பதா அல்லது அவர்களுக்கு கடன் வாங்கி பணத்தை தருவதா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து கொடுத்ததில், பயனாளிகளிடம் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழவில்லை.
நடப்பு நிதி ஆண்டு பணி ஆணை வழங்கும்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் பணம் கேட்பதாக புகார் வருகிறது. எந்த ஒன்றியங்களில் இப்படி வசூல் நடக்கிறது என ஆய்வு செய்யப்படும்.
மேலும், வீடு கட்ட தேர்வு செய்த பயனாளிகளுக்கு, ஸ்டேஜ் என அழைக்கப்படும் எந்த அளவிற்கு கட்டுமான பணிகள் முடித்துள்ளனரோ அந்த அளவிற்கு பணம், அவர்களின் வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்படும். அதனால், யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 17 மாதங்களே இருப்பதால், வீட்டிற்கு போகும்போது கணிசமான வருவாய் ஈட்டி விடலாம் என, பல விதங்களில் கட்டிங் போடுகின்றனர்.
இதில், ஒரு சில ஊராட்சி தலைவர்கள் நாம் பதவியில் இல்லை என்றாலும், நம் பேர் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பணம் வாங்காமல் உள்ளனர்.