/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருங்கோழியில் 5 ஏக்கரில் வன விரிவாக்க மையம்
/
பெருங்கோழியில் 5 ஏக்கரில் வன விரிவாக்க மையம்
ADDED : ஏப் 30, 2025 09:51 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்கோழி கிராமத்தில் உள்ள 250 ஏக்கர் காப்பு காடு பகுதியில் 5 ஏக்கரில் வன விரிவாக்க மையம் அமைகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.
காஞ்சிபுரம் வனக்கோட்ட கட்டுப்பாட்டில், 8358.5 ஏக்கர் மற்றும் செங்கல்பட்டு வனக்கோட்ட கட்டப்பாட்டில், 42,135 ஏக்கர் பரப்பளவு காப்பு காடுகள் உள்ளன.
இந்த காப்புக்காடுகளில் மான், மயில், முயல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் மற்றும் காப்புக்காடுகளை பாதுகாக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர, மாவட்டத்தில் வனப்பகுதி வழியாக கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை துறை சாலைகள், நெடுஞ்சாலை துறை சாலைகள், மாவட்ட சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகளில், வனத்துறையினர் தடையில்லாத சான்று வழங்கும் பணி செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 2019ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது.
புதிய மாவட்டத்திற்கு, வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் பிரிக்கப்பட்டு தனியாக இயங்கி வந்தன. இதில், வனத்துறை மட்டும் பிரிக்கப்படாமல் இருந்தது.
தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய சரகங்களுடன் வண்டலுார், செய்யூர் வனச்சரகங்கள் புதிய சரகங்கள் அடங்கிய செங்கல்பட்டு வன மாவட்டத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய வன சரகங்களுடன், குன்றத்துார் வனச்சரகம் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குரிய வன விரிவாக்க மையம், செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வந்தது. தற்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இரு மாவட்டங்களாக பிரிந்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வன விரிவாக்க மையம் இல்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, புதிய வன விரிவாக்க மையம் ஏற்படுத்த வேண்டும் என, வனத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, உத்திரமேரூர் ஒன்றியம் பெருங்கோழி கிராமத்தில் வன விரிவாக்க மையம் அமைக்க வனத்துறை தேர்வு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த வன விரிவாக்க மையத்தில், தேக்கு, வேங்கை, மகோகனி உள்ளிட்ட மரங்களை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் பெருங்கோழி கிராமத்தில், 250 ஏக்கர் காப்பு காடு அருகே, ஐந்து ஏக்கரில் மத்திய அரசின் வன விரிவாக்க மையம் அமைய உள்ளது.
இங்கு, விவசாயிகளுக்கு தேவையான மரங்களை உற்பத்தி செய்து கொடுக்க உள்ளோம். இந்த வன விரிவாக்க மையத்திற்கு வனசரகர், வனவர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நியமனத்திற்கு காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்த பின் வன விரிவாக்க மையத்தில் செடிகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.