/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மாஜி' கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு
/
'மாஜி' கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு
ADDED : ஜூன் 26, 2025 10:39 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் மாட வீதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான், 60. இவர், காஞ்சிபுரம் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது அ.தி.மு.க., வட்ட செயலராக உள்ளார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 40. என்பவருக்கும் பழக்கம் உள்ளது. கடந்த 2016 ல், மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானபோது, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்துள்ளது.
ஆனால், அப்போது தேர்தல் நிறுத்தப்பட்டதால், அடுத்த பல ஆண்டுகள் தேர்தல் நடக்காத நிலை நீடித்தது. இந்நிலையில், 2022ல், 9 வது வார்டில், நடந்த மாநகராட்சி தேர்தலில், சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த சரவணனுக்கு அப்போது சீட் கிடைக்க வில்லை. இது தொடர்பாக வட்ட செயலர் கண்ணபிரானுக்கும், சரவணனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
அதுமுதல், கடந்த மூன்று ஆண்டுகளாகவே இருவருக்கும் வாக்குவாதம், சிறிய அளவிலான பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் முன் அமர்ந்திருந்த கண்ணபிரானை, அங்கு வந்த சரவணன் திடீரென அரிவாளால் வெட்டினார்.
கண்ணபிரான், ஓடியும் அவரை விரட்டி வெட்டியுள்ளார். இதில் தலை, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில், கண்ணபிரான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரவணனை பிடித்த அக்கம் பக்கத்தினர் அவரை சிவகாஞ்சி போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் சரவணனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.