ரூ.35 கோடியிலான குடிநீர் மேம்பாட்டு பணிகள் முடக்கம்! அதிகாரிகள்மீது பழிபோடும் மக்கள் பிரதிநிதிகள்
ரூ.35 கோடியிலான குடிநீர் மேம்பாட்டு பணிகள் முடக்கம்! அதிகாரிகள்மீது பழிபோடும் மக்கள் பிரதிநிதிகள்
UPDATED : ஆக 15, 2026 09:37 PM
ADDED : ஆக 15, 2026 09:03 PM

காஞ்சிபுரம்:நகர்ப்புற வளர்ச்சிக்கான 'அம்ரூத்' திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த, 35.69 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை முடிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால், வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிகாரிகள் ஒத்துழைக்காததே இந்த சிக்கலுக்கு காரணம் என, பேரூராட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், நகர்ப்புற வளர்ச்சிக்கான, 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 35.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் திட்டப் பணிகள் பணிகள் நடந்து வருகின்றன.
உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, நான்கு தண்ணீர் உறிஞ்சும் கிணறுகள், இரண்டு நீரேற்றும் நிலையங்கள், இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 12 கி.மீ., பிரதான குடிநீர் குழாய், 80 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் வினியோக குழாய் அமைக்கும் பணிகளுக்கு, 20.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
வாலாஜாபாத் பேரூராட்சிக்கு பாலாற்றில் இருந்து நான்கு உறிஞ்சு கிணறுகள், ஒரு நீரேற்றும் நிலையம், ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2.25 கி.மீ., பிரதான குடிநீர் குழாய், 47.76 கி.மீ., குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்க, 14.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த, 2021ல் தொடங்கப்பட்ட இந்த பணிகள் இந்தாண்டு மார்ச்சிற்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், 65 சதவீத பணிகள் கூட இன்னும் முடியாமல் உள்ளது.
இதனால், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாக, வாலாஜாபாத் பாலாற்றில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு இயந்திரங்களை பயன்படுத்தும்போது, குழாய் உடைப்பு ஏற்படுகிறது.
அதை சம்பந்தப்பட்ட நிறுவனமும் சரி செய்து கொடுக்கவில்லை; பேரூராட்சி நிர்வாகமும் சீரமைக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதால், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அதேபோல, உத்திரமேரூர் பேரூராட்சியில், செயல்படுத்திய பணிகள் பூர்த்தி செய்யாததால், பல்வேறு தெருக்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இருப்பினும், சில கவுன்சிலர்கள் குடிநீர் பிரச்னை தீர்க்க லாரிகள் மூலமாக குடிநீரை வினியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, அம்ரூத் திட்ட பணிகள் விரைந்து முடித்து, பொது மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுது ஏற்பட்ட குடிநீர் பணிகளை சரி செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:
வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகளில், தி.மு.க.,வினரே தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களாக உள்ளனர். பேரூராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை அவர்களே தீர்க்கலாம்.
இருப்பினும், பிரச்னை தீர்க்க தி.மு.க.,வினர் முன் வர மறுக்கின்றனர். த.வெ.க., அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், தி.மு.க.,வினர் செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேரூராட்சி தலைவர் ஒருவர் கூறியதாவது:
நான்கு மாதங்களாக, காஞ்சிபுரம் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் எந்த ஒரு வளர்ச்சி பணிக்கும் செவி சாய்க்கவும், நிதி ஒதுக்காமல் உள்ளார். இதனால், எந்த ஒரு வளர்ச்சி பணிகள் மற்றும் பழுது நீக்கும் பணிகளை, செயல் அலுவலர்களால் மேற்கொள்ள முடிவில்லை.
உதவி இயக்குநர் தன், மொபைல் போன் எண்ணை, 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார். இப்படி இருக்கும்போது, எப்படி பேரூராட்சி நிர்வாகத்தை நடத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சிகளில், குடிநீர் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்' என்றார்.
