/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் தோட்ட உற்சவ கல்மண்டபம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் தோட்ட உற்சவ கல்மண்டபம்
ADDED : ஜன 08, 2025 09:56 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 44வது திவ்யதேசமாக விளங்குகிறது.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியான நாளை சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதில், கோவில் தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருங்கல் மண்டபத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இதுகுறித்து அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார் கூறியதாவது:
நாளை நடபெறும் வைகுண்ட வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவிலில் 70 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் உட்பிரகாரத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் மலர்களால் அலங்காரமும், சொர்க்கவாசல் கதவுக்கு 20 லட்சத்தில் வெள்ளி தகடும் பொருத்தப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கு ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு உள்ளே வரும் பக்தர்கள், கோவில் பின்பக்கம் உள்ள தோட்டம் வழியாக வெளியே செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோட்டத்தில் 22 லட்சம் ரூபாய் செலவில், 20 அடி உயரமும், 15.5 அடி அகலமும் கொண்ட கருங்கல் மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முதன்முறையாக உற்சவர் ஆதிகேசவ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
கோவிலில் நடைபெறும் தோட்ட உற்சவத்தின்போது, உற்சவர் பெருமாள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வைகுண்ட ஏகாதசியான நாளை காலை சுப்ரபாதம் சேவை, தனுர்மாத பூஜை, விஸ்வரூப தரிசனம் சொர்க்கவாசல் துவார பூஜை, நிஜபாத பூஜை, மாலையில், உற்சவருக்கு தோட்டத்தில் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.