ADDED : செப் 22, 2026 03:21 PM
மருத்துவ குணங்கள் நிறைந்ததும், மணல் கலந்த களிமண்ணிலும், கொல்லிமலை இஞ்சி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அனைத்து விளைப்பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், கொல்லிமலை இஞ்சி ஊடு பயிராக சாகுபடி செய்துள்ளேன். இது, நட்டு 10 மாதங்களுக்கு பின் மகசூல் கொடுக்க தொடங்கி விடும்.
குறிப்பாக, கொல்லிமலை பகுதியில் விளையும் இஞ்சி எப்போதும் தடிமனாகவும், எளிதில் அழுகும் தன்மை இல்லாமல் இருக்கும். நம்மூர் மணல் கலந்த களிமண்ணுக்கு சாகுபடி செய்யும் போது, அதே திடத்தில் தான் உள்ளது.
எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறி, பழங்கள், கீரை ஆகிய விளைப்பொருட்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.
செரிமான கோளாறுகளை சரி செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மூட்டு வலிகள் மற்றும் சளி இருமலை போக்கவும் பெரிதும் உதவுகிறது.
அதிக காரத்தன்மையும், மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சந்தையில் அதிக பணம் கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
– சு.ரமேஷ்,
81109 44475.
