/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி மாணவர்கள் 9,000 விதை பந்துகள் தயாரிப்பு
/
அரசு பள்ளி மாணவர்கள் 9,000 விதை பந்துகள் தயாரிப்பு
அரசு பள்ளி மாணவர்கள் 9,000 விதை பந்துகள் தயாரிப்பு
அரசு பள்ளி மாணவர்கள் 9,000 விதை பந்துகள் தயாரிப்பு
ADDED : ஆக 08, 2025 02:05 AM

வாலாஜாபாத்,:மழைக்காலங்களில் விதைப்பதற்காக வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் ஒன்றிணைந்து 9,000 விதை பந்துகள் தயாரித்தனர்.
பூமி வெப்பமாதல் மற்றும் காற்று மாசை குறைத்து பசுமை சூழலை உருவாக்கிட அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விதை பந்துகள் தயாரித்து மழைக்காலங்களில் அவைகளை காடு, நிலம், குளம், ஏரி, ஆற்றங்கரை போன்ற பகுதிகளில் வீசி மரங்கள் உருவாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் மாசிலா மணி முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், விதைப் பந்துகள் தயாரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பங்கேற்று, விதை பந்துகள் தயாரிப்பை துவக்கி வைத்து அதன் அவசியம் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார்.
அதை தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்கள் ஒன்றிணைந்து, உரத்தோடு சேர்ந்த களிமண்ணில் மர விதைகளை உள்ளே வைத்து பந்து போன்று வடிவமைத்து 9,000 விதைப் பந்துகள் தயார் செய்தனர்.
இதில், வேம்பு, அத்தி, மலை வேம்பு, புங்கன், சீத்தா, மகிழம், வாகை, வேங்கை, புளி, ஆலமரம், அரசமரம், புன்னை, வில்வம் உள்ளிட்ட மரங்களின் விதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
இந்த விதைப் பந்துகளை விதைக்கும் துவக்க நிகழ்ச்சி, உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் ஏரி பகுதியில் விரைவில் துவங்க உள்ளதாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் துர்கா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், அப்பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.