/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராம சபை புறக்கணிப்பு: பூட்டிய கோவிலை திறந்து வழிபாடு வாரணவாசி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க., கொடி, கல்வெட்டு அகற்ற தீர்மானம்
/
கிராம சபை புறக்கணிப்பு: பூட்டிய கோவிலை திறந்து வழிபாடு வாரணவாசி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க., கொடி, கல்வெட்டு அகற்ற தீர்மானம்
கிராம சபை புறக்கணிப்பு: பூட்டிய கோவிலை திறந்து வழிபாடு வாரணவாசி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க., கொடி, கல்வெட்டு அகற்ற தீர்மானம்
கிராம சபை புறக்கணிப்பு: பூட்டிய கோவிலை திறந்து வழிபாடு வாரணவாசி பஸ் நிறுத்தத்தில் தி.மு.க., கொடி, கல்வெட்டு அகற்ற தீர்மானம்
ADDED : ஜன 27, 2025 04:22 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாட்டின் 76வது குடியரசு தினவிழாவையொட்டி, 274 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் தனி அலுவலர்கள் தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம் கடல்மங்கலத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாரியம்மன் கோவிலில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிபட்டு வந்தனர். நான்கு ஆண்டுக்கு முன், ஒரு சிலர் கோவிலை சொந்தம் கொண்டாடி, பூட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராமத்தினர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில், ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், கடல்மங்கலம் கிராமத்தில், நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கிராம சபையில் பங்கேற்காமல், கூட்டத்தை புறக்கணித்து பூட்டி இருந்த கோவிலை திறந்து வழிபாடு செய்தனர். இதையறிந்து, கோவிலை பூட்டி வைத்திருந்த நபர்கள், கிராம மக்களோடு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின், கைகலப்பாக மாறியது.
தகவலறிந்து வந்த உத்திரமேரூர் வருவாய் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். பின், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் கூறுகையில், “மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் நாளை தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில், நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது,'' என்றார்
குண்ணவாக்கத்தில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்றார்.
இதில், எம்.எல்.ஏ., சுந்தர் பேசுகையில், 'இப்பகுதியின் நீண்டநாள் கோரிக்கையான, துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் குழுவினருக்கு கடன் மானியம் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்,” என்றார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிகுப்பத்தில்  ஊராட்சி தலைவர் சைலஜா தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், காலனி கோவில் தெரு, நடுத்தெருவிற்கு புதிதாக சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பருத்திகுன்றத்தில் ஊராட்சி தலைவர் மலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் 44 பயனாளிகளுக்கு வீடு கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார்
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பேரீஞ்சம்பாக்கத்தில், ஊராட்சி தலைவர் உஷா தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கிருஷ்ணா நகரில் சாலை வசதி கோரி கோரிக்கை மனுவுடன், அப்பகுதிவாசிகள், 11:30 வந்தனர். அதற்குள் கூட்டம் நிறைவடைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இக்கூட்டத்தில், பற்றாளராக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. பெயரளவிற்கு நடந்த கூட்டத்தால், மக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் தேவையை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
எறையூரில் ஊராட்சி மன்ற தலைவர் சசிரேகா தலைமையில் கூட்டம்  நடந்தது. ஊராட்சியில் உள்ள பொதுகுளம் மற்றும் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும். கிராமத்தின் முக்கிய சந்திப்பில் 'சிசிடிவி' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குன்றத்துார்
குன்றத்துார் ஒன்றியம், வைப்பூரில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். இதில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டது.
வாலாஜாபாத்
வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசியில் ஊராட்சி தலைவர் பிரேமா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. வாரணவாசி சாலையில் உள்ள பேருந்து நிறுத்த பகுதியில், புதிதாக பயணியர் நிழற்குடை கட்ட இடம் தேர்வு செய்துள்ள இடத்தில், தி.மு.க., கட்சி கொடி மற்றும் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றி நிழற்குடை கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொள்ளாழியில்,  ஊராட்சி தலைவர் ஹசினாபேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பொது குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, குளத்தை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழையசீவரத்தில் ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமையிலும், வேண்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சரளா தலைமையிலும், தென்னேரியில் ஊராட்சி தலைவர் கலையரசி தலைமையிலும், ஊத்துக்காடில் தலைவர் சாவித்திரி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
- -நமது நிருபர்கள் குழு -

