/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மயான கொள்ளை திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
மயான கொள்ளை திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : மார் 11, 2024 04:23 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அங்காளம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான மாசி மாத மயான கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது.
பறவை காவடி
பூங்கரகம், சக்திகரகம், அக்னிகரகம் ஏந்தி வாத்திய இசைகளுடன் புஷ்ப விமானத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
மலர் அலங்காரத்திலும், சிம்ம வாகனத்திலும், உத்திரமேரூர் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலமாக வந்தார்.
டிராக்டர், லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரங்களில் பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த மயான கொள்ளை விழாவால் உத்திரமேரூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
↓சாலவாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் மயான கொள்ளை உற்சவம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அக்கோவிலில், காலையில் பல்வேறு பூஜைகள் நடந்தன.
அதை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் அப்பகுதி மயானத்திற்கு ஊர்வலமாக வந்தடைந்தார். அங்கு மயான கொள்ளை மற்றும் சூரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, மயானத்தில் பொரி, உருண்டை, கடலை, பழங்கள், எலுமிச்சை, இளநீர் மற்றும் காய்கறிகள் வீசப்பட்டன
↓உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணவாக்கம் மற்றும் அருங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது
↓சின்ன காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்ள கோவிலில், 119வது ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 7ல் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. எட்டாம் தேதி இரவு மஹா சிவராத்திரி பூஜை நடந்தது.
நேற்று மயான கொள்ளை உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு திருக்காலிமேடு, பெரிய வேப்பங்குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டுதல் நிகழ்வு நடந்தது.
நாணயங்கள் சூறை
மாலை 4:00 மணிக்கு கோவில் முன் அங்காளம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக காய்கறிகள், பழ வகைகள், சுண்டல், கொழுக்கட்டை, சில்லரை நாணயங்களை சூறை விட்டனர்.
↓காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமம் மந்தவெளியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, மாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, மயான கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது.
காலை, 10:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம், மாலை, 4:00 மணி அளவில் அலகு குத்திய பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இரவு மலர் அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், கொட்டவாக்கம் கிராமத்திலும், மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.

