/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் 50 சதவீதம் சரிவு பருவ மழை கை கொடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை
/
ஊராட்சி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் 50 சதவீதம் சரிவு பருவ மழை கை கொடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை
ஊராட்சி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் 50 சதவீதம் சரிவு பருவ மழை கை கொடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை
ஊராட்சி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் 50 சதவீதம் சரிவு பருவ மழை கை கொடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை
ADDED : ஜூன் 24, 2025 12:41 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், திறந்தவெளி கிணறுகளில் நீர் மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது என, விவசாயிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவ மழையால், சம்பா சாகுபடிக்கு இடையூறு இருக்காது என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், 959 திறந்தவெளி கிணறுகள், 381 நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் ஏரிகள்; 380 ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டு ஏரிகள் என, பல்வேறு நீர் நிலைகள் உள்ளன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக்கு நிரம்பும் தண்ணீரால் ஏரி, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறுகளில், நீர் பாசனம் செய்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஏரிகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில், ஜனவரி மாதம் நிலத்தடி நீர் மட்டம் அதிகமாக இருந்தது. விவசாய பயன்பாடு மற்றும் கோடை வெயிலுக்கு நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாக சரிய துவங்கியுள்ளது.
குறிப்பாக, திறந்தவெளி கிணறு மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் நான்கு மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. உதாரணமாக, வாலாஜாபாத் தாலுகாவில் தென்னேரி ஏரியில், 18 அடி தண்ணீரை தேக்கி வைக்கும் திறனுடையது. நீர் பாசனம் மற்றும் கோடை வெயில் என, நான்கு அடி தண்ணீர் குறைந்துள்ளது. தற்போது, 14 அடி இருப்பு உள்ளது.
அதேபோல, வில்லிவலம், கோயம்பாக்கம், ராஜம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 60 அடி திறந்தவெளி கிணறுகளில், 30 அடிக்கும் குறைவாக தண்ணீர் இருப்பு உள்ளன.
இதேபோல, காஞ்சிபுரம் தாலுகா, சிறுவாக்கம், நாகப்பட்டு, வேளியூர் உள்ளிட்ட பல்வேறு கிராம கிணறுகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால், விவசாயம் துவக்காமல் நிலத்தை பண்படுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் தாலுகா மதுார், சித்தாலப்பாக்கம், கிளக்காடி, கிடங்கரை, பொற்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 50 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் 40 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்த தண்ணீரால், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கு நீர் பாசனம் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது இருக்கும் கிணற்று நீரில் மின் மோட்டார் போட்டு தண்ணீர் உறிஞ்சும் போது நான்கு மணி நேரத்தில் கிணற்றில் தண்ணீர் காலியாகி விடுகிறது. மூன்று மணி நேர இடைவெளிக்கு பிறகு தான் மீண்டும் மின் மோட்டாரை இயக்க வேண்டி உள்ளது.
இதனால், ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை, விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதற்கேற்ப, பகல் முழுதும் வெயிலும், மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
சம்பா பருவமும் முன் கூட்டியே துவங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.