பாதியில் விடுபட்ட கால்வாய் பணி கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல்
பாதியில் விடுபட்ட கால்வாய் பணி கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : மார் 31, 2026 07:56 PM

புத்தேரி: காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி பிரதான சாலையோரம், பாதியில் விடுபட்டுள்ள கான்கிரீட் வடிகால்வாய் கட்டுமானப் பணியால், கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பிரதான சாலையோரம் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயில் அடிக்கடி செடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் மாறிவிடுகிறது. இதனால், கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கான்கிரிட் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் முழு நீளத்திற்கும் அமைக்காமல் பாதியில் விடப்பட்டுள்ளது.
இதனால், கால்வாய் ஒட்டியுள்ள காலிமனையில் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, பாதியில் விடப்பட்டுள்ள கான்கிரீட் கால்வாய் கட்டுமான பணியை விரைந்து முடிக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
