ADDED : நவ 13, 2024 11:18 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஏரியில், மின் வாரியத்தால் மின் கம்பங்கள் நடப்பட்டு, அப்பகுதி விளைநிலங்களுக்கு, மின் கம்பிகள் வாயிலாக மின்சாரம் செல்கின்றன. இந்த ஏரிக்கு மேற்கே உள்ள, 200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை, ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி வட்ட கிணறுகளிலிருந்து, பம்ப் செட்டுகள் வாயிலாக உறிஞ்சி பாசனம் செய்ய மின்சாரம் பயன்பட்டு வந்தது.
தற்போது, ஏரியில் உள்ள இரண்டு மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், கடந்த மாத மழையின்போது, அறுந்து தொங்குகிறது. இதனால், அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஒரு மாதமாக மின்வழித்தடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இதற்கு பதிலாக விளைநிலங்களுக்கு, வேறொரு மின்வழித்தடத்தில் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, அறுந்து தொங்கும் மின் கம்பிகளை அகற்றி, புதிய மின்வழித்தடத்தை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.