தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கீழ்கதிர்பூரில் பட்டு மையம் அமைவதால் நெசவாளர்கள்...மகிழ்ச்சி!ரூ.2 கோடி ஒதுக்குவதாக சட்டசபையில் அறிவிப்பு

கீழ்கதிர்பூரில் பட்டு மையம் அமைவதால் நெசவாளர்கள்...மகிழ்ச்சி!ரூ.2 கோடி ஒதுக்குவதாக சட்டசபையில் அறிவிப்பு

கீழ்கதிர்பூரில் பட்டு மையம் அமைவதால் நெசவாளர்கள்...மகிழ்ச்சி!ரூ.2 கோடி ஒதுக்குவதாக சட்டசபையில் அறிவிப்பு


UPDATED : செப் 03, 2026 03:15 AM

ADDED : செப் 02, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 03:15 AM ADDED : செப் 02, 2026 08:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என, கடந்த தி.மு.க., அரசு அறிவித்து நான்கு ஆண்டுகளாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. புதிதாக பொறுபேற்றுள்ள த.வெ.க., அரசு, முதல் கூட்டத் தொடரிலேயே, கீழ்கதிர்பூரில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்கப்படும் என அறிவித்ததோடு, முதற்கட்டமாக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, நெசவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

காஞ்சிபுரம் பட்டு சேலை உலக அளவில் பிரபலம். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 ஆயிரம் நெசவாளர்கள் தனியார் மற்றும் கூட்டுறவு கைத்தறி சங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் சேலைகள், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேலாக விற்பனையாகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

இருப்பினும், ஏற்றுமதிக்கான ஒருங்கிணைந்த வர்த்தக வசதிகள் இல்லாததால், நெசவாளர்கள் மற்றும் பட்டு உற்பத்தியாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து, 2022 நவம்பரில் சென்னையில் நடந்த பன்னாட்டு ஜவுளி கருத்தரங்கில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், அறிவிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்தும், ஏற்றுமதி மையம் அமைப்பதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால், அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி நெசவாளர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பின், த.வெ.க., அரசு தாக்கல் செய்த முதல் மானிய கோரிக்கையிலேயே, காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உயர்தர பட்டு ரகங்களை உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏதுவாக, கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடி ரூபாய் செலவில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்கப்படும் என, கைத்தறித் துறை அமைச்சர் விஜய்பாலாஜி சட்டசபையில் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் செயல்படும் பட்டு பூங்காவில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டும், நான்காண்டுகளாக திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்கப்பட்டால், காஞ்சிபுரம் பட்டுக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு கிடைப்பதுடன், நேரடி ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கும். இதன் வாயிலாக பட்டு நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, இத்தொழிலை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், காஞ்சிபுரம் பட்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் உள்ள நிலையில், அதன் சர்வதேச சந்தை மதிப்பை அதிகரிக்க இந்த மையம் முக்கிய பங்காற்றும் என நெசவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் விற்பனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, இந்த ஏற்றுமதி மையம் உதவும். காஞ்சிபுரம், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் எளிதாக பட்டு சேலை எடுத்து செல்ல வாய்ப்பு கிடைக்கும். இது வரவேற்கக்கூடியது. - எஸ். மேகநாதன், பட்டு சேலை உற்பத்தியாளர், காஞ்சிபுரம்.


பட்டு சேலை ஏற்றுமதி மையம், பல ஆண்டுகளுக்கு முன் அமைத்திருக்க வேண்டும். இப்போதைய நடவடிக்கை மிக தாமதம். அதேபோல, இயந்திரங்களில் நெய்யப்படும் பட்டு சேலைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை ஏற்றுமதி செய்யக்கூடாது. கைத்தறியில் நெய்யப்பட்ட சேலைகள் தான், ஏற்றுமதி மையம் அங்கீகரிக்க வேண்டும். அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் நெசவாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும். - எம்.கணேசமூர்த்தி, பட்டு சேலை உற்பத்தியாளர், காஞ்சிபுரம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us