/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையோரம் நெல் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஆக 09, 2025 01:20 AM

காஞ்சிபுரம்:பள்ளூர் - சோகண்டி சாலையோரம் உள்ள நெல் குவியல்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பள்ளூர் - சோகண்டி வரையில் உள்ள, 24 கி.மீ., சாலையை இருவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி, 2021 ஏப்ரலில் துவங்கியது.
23 அடி சாலை, 35 அடியாக மேம்படுத்தப்பட்டு, இருவழிச் சாலையாக பயன்பாட்டில் உள்ளது.
தற்போது, சொர்ணவாரி பருவத்தில் நெல் அறுவடை செய்யும் பணி துவங்கி உள்ள நிலையில், நெல் வயலில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அறுவடை செய்யும் நெல்லை வயலில் கொட்டுவதை தவிர்த்து, பிரதான சாலை ஓரங்களில் கொட்டுகின்றனர்.
குறிப்பாக, பள்ளூர் - சோகண்டி சாலையோரம், குவியல் குவியாலாக நெல்லை கொட்டி உள்ளதால், அந்த சாலை வழியாகச் செல்வோர் நிலை தடுமாறி, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதுதவிர, நெல் குவியல் மீது வெள்ளை நிற தார்ப்பாய் தவிர்த்து மஞ்சள், நீலம், கருப்பு நிற தார்ப்பாய் போடுவதால், வாகன ஓட்டிகள் கவனிக்காமல் வாகனங்களை இயக்கி, விபத்து ஏற்படுகிறது.
எனவே, சாலையோரம் கொட்டப்படும் நெல் குவியல் அருகே, இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.